நாடாளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படும். அதன்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 2 அமர்வாக நடைபெறுகிறது. முதல் அமர்வு நேற்று தொடங்கி முதல் வருகிற 13-ந் தேதி வரையும், 2-ம் அமர்வு மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையும் நடக்கிறது.
வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இது 9-வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் வரும் எதிர்பார்ப்பை போலவே இந்த வருடமும் எதற்கெல்லாம் விலக்கு இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடையே அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நடுத்தர சம்பளம் வாங்கும் வர்க்கத்தினர் அதிகளவு வருமான வரிச் சலுகையை எதிர்பார்க்கிறார்கள். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை அதிகளவு சேமிக்க வேண்டும், அதேநேரம் வருமான வரி தாக்கல் செய்வதும் ஈசியாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையும், எதிர்ப்பார்ப்புமாக உள்ளது.
சிம்பிளான, சொல்லவேண்டுமானால் வெளிப்படையான வரிவிதிப்பு முறை இருக்க வேண்டும், IRT filing ஈஸியாக வேண்டும், குறைந்த அளவில் tax notice வரவேண்டும், தெளிவான விதிகள், மூத்த குடிமக்களுக்கு கூடுதல் நிவாரணம், பென்ஷன் இவையெல்லாம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அந்த வகையில் வரும் பட்ஜெட் மீது நடுத்தர வர்க்கத்தினர் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர். இவர்கள் நம்பிக்கையைக் காக்கும் வகையில், புதிய வரி விதிப்பு முறையில் சில விலக்குகள் அறிவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014க்கு முன்பு வரை வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக இருந்த நிலையில் அதன் பிறகு படிப்படியாக பல்வேறு சமயங்களில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டன. குறிப்பாக கடந்த வருடம் பொது பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊதியம் பெறுபவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் நடுத்தர வருமானம் பெறுபவர்கள் மீது இருந்த வரிச்சுமையையும் கணிசமாக குறைந்தது. New tax regime எனப்படும் புதிய வரி விதிப்பு முறைகளில் இருப்போர் ரூ.12 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை. அதேசமயம், புதிய முறையில் உச்சவரம்பு அதிகமாக இருந்தாலும் கூட அதில் சேமிப்பை ஊக்குவிக்கும் சலுகைகள் இல்லை என்று பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் விமர்சித்து வந்தனர்.
இதற்கிடையே வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1-ம்தேதி) தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. புதிய வரி விதிப்பு முறையில் 80C மற்றும் 80D முதலீட்டுச் சலுகைகள் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், தற்போதுள்ள ரூ.12 லட்சம் என்ற வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.17 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அறிவிப்பு வந்தால் ரூ.17 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு கிடைக்கும். இதன் மூலம் நடுத்தர மற்றும் சமானிய மக்களின் வருமானம் மிச்சமாவதுடன், நீண்ட கால தேவைக்காக அவர்களால் சேமிக்கவும் முடியும்.
மேலும், 2026 பொது பட்ஜெட்டில் முதியோருக்காக சில சிறப்புச் சலுகைகள் சேர்க்கப்படலாம் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்த சலுகைகளை மத்திய அரசு அறிவித்தால், நிலையான கழிவில் ரூ.1 லட்சம் தள்ளுபடி கிடைக்கும். வீட்டுக் கடன் வட்டிக்கு ரூ.2 லட்சம் மற்றும் அசல் தொகைக்கு ரூ. 1.5 லட்சம் வரி விலக்கு கிடைக்கும்.
சுகாதாரக் காப்பீட்டுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும். இதில் ரூ.12 லட்சம் நேரடி வரி விலக்கையும் சேர்த்தால், மொத்த வரி விலக்கு அது ரூ.17 லட்சமாக மாறும். அதேபோல ரூ.20 லட்சம் வரை சம்பாதிப்போருக்கும் கூட தற்போதுள்ள வரிச் சுமையில் ரூ.1 லட்சம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பே வரும் பொது பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக வரிச்சுமை குறைய வேண்டும், விதிகள் எளிதாக இருக்க வேண்டும், மேலும் வருமான வளர்ச்சி, வேலை வாய்ப்பை ஊக்குவிக்ககூடிய பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.