வரும் பிப்ரவரி 1-ம்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய போகும் பட்ஜெட்டில் மோடி அரசாங்கம் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுவது வழக்கம். 2 கட்டங்களாக நடைபெறும் இந்த தொடரில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1-ம்தேதி தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும் மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ 3.0 அரசாங்கத்தின் 3-வது முழுமையான பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது, இது சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வாகும்.
இந்த பட்ஜெட் தாக்கலின் மூலம், மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா மற்றும் மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட முன்னாள் நிதியமைச்சர்களை விட அதிக எண்ணிக்கையிலான மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் முறியடிப்பார்.
இந்த மத்திய பட்ஜெட் எதிர்நோக்கி நடுத்தர மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக வரிவிதிப்பு முறைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் மக்களிடையே நம்பிகைகை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தவிர பெண்களை மையமாக கொண்டு இந்த பட்ஜெட்டில் எந்தெந்த மாற்றங்கள் இடம்பெறலாம், பெண்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பதற்கான கவனமும் அதிகரித்துள்ளது.
இந்த பட்ஜெட்டில் மேலும் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் வகையிலான பல திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்திய பெண்களின் நிதி பாதுகாப்பு உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட ஜன்தன் யோஜனா திட்டத்தில் பெண்கள் பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகள் தற்போது செயலற்ற நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பணப்பரிமாற்றம் தவிர இந்த கணக்குகள் மூலம் பெரிதாக பலன்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதனை மாற்ற இந்த பட்ஜெட்டில் ஜன்தன் கணக்கு, காப்பீட்டு கடன் உள்ளிட்ட நிதி சேவைகளுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெண்களுக்கு என்று பிரத்யேக கடன் அட்டைகள் வழங்குவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
முதன் முறையாக வங்கி சேவைகளை பெறும் பெண்களுக்கான எளிய கடன் அட்டை திட்டங்கள் குறித்தும் அரசு கவனம் செலுத்தலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் குறைந்த ஆவணங்களுடன் எளிதாக பெறக்கூடிய சிறு, குறு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் இதனால் பெண்களிடையே கடன் பெறும் தயக்கம் குறையும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
சுயதொழில் செய்யும் பெண்கள், சிறு வியாபாரம் தொடங்க விரும்பும் பெண்கள் இவர்களுக்கு சுலபமாக கடன் திட்டங்கள் கொண்டு வரப்படலாம். நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் சுயத்தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு இதுபெரும் உதவியாக அமையும் என்றும் கூறப்படுகிறது. காப்பீடு வசதிகள் இல்லாத பெண்களுக்கான திட்டங்களும் இந்த பட்ஜெட் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
கடந்தாண்டு ஆரம்பத்தில் இருந்து தங்கம் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வருவது சாமானிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை குறையுமா? குறையாதா? என்ற எந்த ஒரு தெளிவான அறிகுறியும் தற்போதைக்கு தெரியவில்லை. இந்நிலையில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்ர் நிர்மலா சீதாராமன் தங்கத்திற்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைந்தார். அந்த அறிவிப்பு உள்நாட்டு தங்கத்தின் விலை குறைய உதவியாக இருந்தது.
அப்போது தங்கத்தின் விலை 6 சதவீதம் குறைந்ததுடன் தங்கத்தின் இறக்குமதி 47 சதவீதம் உயர்ந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வரவிருக்கும் பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக மேலும் குறைக்க மத்திய அரசு முன்வருமா என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களிடையே அதிகரித்துள்ளது.
அப்படி வரி குறைக்கப்படும் பட்சத்தில் தங்கம் இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் செலவு குறையும். இதன் காரணமாக தங்க நாணயங்கள், கட்டிகள், நகைகள் விலைகள் 2 சதவீதம் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த பட்ஜெட்டிலும் மத்திய அரசு தங்கத்தின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, சாமானிய மக்களிடைய குறிப்பாக பெண்களிடையே வலுத்து வருகிறது.
புதிய வரி முறையின்கீழ் ரூ. 12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட 2025-26 பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பைத் தொடர்ந்து, வரி செலுத்துவோரிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில், தற்போதுள்ள ரூ.12 லட்சம் என்ற வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.17 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வரி செலுத்துவோர் மேலும் வருமான வரி சலுகைகள், எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கான இலக்கு பலன்களை எதிர்பார்க்கின்றனர்.
புதிய வரி விதிப்பு முறையில், வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவக் காப்பீடு கோரும் வசதி வழங்கவில்லை. மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதாரக் காப்பீட்டை புதிய வரி விதிப்பு முறையில் நிச்சயமாகச் சேர்க்க வலியுறுத்தப்படுகிறது.
இந்த ஆண்டின் பொது பட்ஜெட்டில் முதியோருக்காக சில சிறப்புச் சலுகைகள் சேர்க்கப்படலாம் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இதில் உள்ள நம்முடைய எதிர்பார்ப்புகளில் எவையெல்லாம் பூர்த்தியாகி உள்ளது என்பதை அறிந்து கொள்ள பட்ஜெட் வரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.