

ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் பொருட்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன், பல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் இந்தியாவில் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்தியா போன்ற அதிக வாகன நெரிசல் கொண்ட நாட்டில், 10 நிமிடங்களுக்குள் ஒரு பொருளை டெலிவரி செய்ய வேண்டும் என்றால், அந்த ஊழியர் தனது உயிரைப் பணயம் வைத்துதான் பணியாற்றுகிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
பிளிங்கிட் (Blinkit) போன்ற நிறுவனங்கள் 10 நிமிட டெலிவரி சேவைக்குப் புகழ்பெற்றவை. இது தவிர ஸ்விக்கி (Swiggy), ஜொமாட்டோ (Zomato), உபெர் (Uber), ஓலா (Ola) உள்ளிட்ட நிறுவனங்களும் குறைந்த நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டுமென ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. மேலும், இவர்களுக்கு நிலையான ஊதியம் கிடையாது. 'டெலிவரி பார்ட்னர்கள்' என்று அழைக்கப்படுவதால், இவர்களுக்குச் சேர வேண்டிய பி.எஃப் (PF), காப்பீடு, போனஸ் போன்ற சட்டப்பூர்வ சலுகைகளை நிறுவனங்கள் வழங்குவதில்லை.
இவற்றையெல்லாம் கண்டித்து 2 லட்சம் டெலிவரி ஊழியர்கள், புத்தாண்டு அன்று முதல் சில நாட்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக டெல்லி , மும்பை , சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் டெலிவரி சேவைகள் முற்றிலும் முடங்கின. இந்தப் போராட்டத்தில் ஒரு சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. அவற்றில் சில
1. 10 நிமிட அல்லது 20 நிமிட டெலிவரி , போன்ற மிகக்குறைந்த கால அவகாச முறைகளை நிரந்தரமாக நீக்க வேண்டும். இது பல சாலை விபத்துகளுக்கு காரணமாகிறது , இதனால் டெலிவரி பார்ட்னர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
2. 1 கிலோமீட்டருக்கு குறைந்தது ₹20 ஊதியமாக வழங்கப்பட வேண்டும்.
3. டெலிவரி ஊழியர்களுக்கு விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை சார்ந்த நிறுவனங்களே ஏற்க வேண்டும்.
4. அறிவிப்பு இல்லாமல் தொழிலாளர்களின் கணக்குகளை முடக்குவதை நிறுத்த வேண்டும்.
5. அமைப்புசாரா தொழிலாளர்களாக மத்திய அரசு தங்களையும் அங்கீகரிக்க வேண்டும்.
இந்த போராட்டங்களை கவனித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா அவர்கள் , டெலிவரி நிறுவனங்களான பிளிங்கிட், செப்டோ , ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ ஆகிய நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், டெலிவரி தொழிலாளர்களின் சாலைப் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழல் குறித்து விவாதித்தார். குறிப்பாக, "10 நிமிடங்களில் டெலிவரி" என்பது தொழிலாளர்களை அதிக அழுத்தத்தில் வேலை செய்ய வைத்து, அவர்கள் போக்குவரத்து விதிகளை மீறவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் வாகனங்களை ஓட்டவும் தூண்டுகிறது என்று கூறினார். இத்தகைய கடுமையான நேரக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்குமாறு நிறுவனங்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.‛‛ஆன்லைனில் 10 நிமிட டெலிவரி என்ற விளம்பரங்களை நீக்கம் செய்ய வேண்டும். 10 நிமிடங்களில் ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படும் என்பது ஊழியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. இதனால் கைவிட வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
அதன் பின்னர் பிளிங்கிட் நிறுவனம் ,தனது விளம்பர உத்தியை மாற்றியுள்ளது." 10 நிமிடங்களில் டெலிவரி" என்ற வாசகத்திற்குப் பதிலாக, "பொருட்கள் உங்கள் வீட்டு வாசலில்" என்ற வாசகத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது. பிளிங்கிட்டின் இந்த முடிவு, மற்ற விரைவு வர்த்தக நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக உள்ளது. லாபத்தை விட தொழிலாளர்களின் உயிரும் முக்கியம் என்பதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் வரும் காலத்தில் 10 நிமிட டெலிவரி என்பது இருக்காது என்று கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தற்போது 10 நிமிட டெலிவரியை ரத்து செய்ய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில அரசு ஏற்கனவே கிக் (Gig) ஊழியர்களுக்கெனத் தனி நல வாரியங்களை அமைத்துள்ளது. மத்திய அரசும் e-Shram போர்டல் மூலம் இவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.