

நாட்டில் சாலை விதிகளை மீறுவோருக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னையில் முதன்முதலாக வாகன ஓட்டிகளுக்கு மின்னணு ரசீதுகள் மூலம் அபராத தொகை விதிக்கப்பட்டது. பிறகு மின்னணு ரசீது வழங்கும் முறை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது ‘ஒரே நாடு ஒரே சலான்’ என்ற திட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் பலரும் அபராத தொகையை செலுத்தாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இதுவரை அபராத தொகையை செலுத்தாத வாகன ஓட்டிகள் விரைந்து அதனை செலுத்துமாறு இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இல்லையெனில் வாகனங்களுக்கான காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 9.17 கோடி மின்னணு ரசீதுகள் வாகன ஓட்டிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் 7.57 கோடி ரசீதுகளுக்கு அபராத தொகையை வாகன ஓட்டிகள் இன்னும் செலுத்தவில்லை. அதாவது அபராத தொகை மட்டும் ரூ.14,000 கோடியை தாண்டுகிறது என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது இந்தியாவில் மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 9,097 கோடி ரூபாய் அபராத தொகை நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1 கோடியே 91 லட்சம் மின்னணு ரசீதுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக கேரளாவில் 99 லட்சம், தமிழ்நாட்டில் 89 லட்சம், குஜராத்தில் 85 லட்சம் மற்றும் ஹரியானாவில் 51 லட்சம் மின்னணு ரசீதுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சாலைப் போக்குவரத்து விதிகளை மீறி, அபராத தொகையை செலுத்தாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனையை அளிக்க இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இருப்பினும் கடைசி எச்சரிக்கையாக விரைந்து அபராத தொகையை செலுத்தி விடுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை இனியும் செலுத்தவில்லை என்றால், வாகனங்களுக்கான காப்பீட்டை இனி புதுப்பிக்க முடியாது. மேலும் வாகனங்களுக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழான FC வழங்கப்படாது மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதும் தடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
வாகனங்களுக்கு ரேட்டிங் முறை:
இந்திய அளவில் வாகனங்களுக்கு ரேட்டிங் முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி சாலைப் போக்குவரத்து விதிகளை ஒழுங்காக கடைப்பிடித்து வரும் வாகன ஓட்டிகளுக்கு நல்ல ரேட்டிங் வழங்கப்படுவதோடு, அவர்களுக்கு காப்பீட்டுத் தொகையில் தள்ளுபடியும் வழங்கப்படும்.
போக்குவரத்து விதிமீறல்கள் அதிகமாக இருந்து, ரேட்டிங் குறைவாக இருப்பவர்களின் வாகனம் சாலையில் செல்ல தடை விதிக்கப்படும் அல்லது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் வாகனங்களின் வேகம் மற்றும் விதிமீறல்களை கண்டறிய போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.