

உத்தரப் பிரதேசத்தில் 13,000 அரசுப் பள்ளி பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடி தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழைய பேப்பர் வியாபாரி ஒருவர் அரசுப் பாடப்புத்தகங்களை சட்டவிரோதமாக வாங்கி, ஒரு லாரியில் ஏற்றிச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அண்டை மாவட்டமான லக்கிம்பூரில் சந்தேகத்தின் பேரில் புத்தகங்களை ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்த காவல்துறையினர், சுமார் 10 டன் எடையுள்ள புத்தகங்களைப் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
2026-2027 கல்வியாண்டிற்காக 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க அச்சிடப்பட்ட சுமார் 13,595 பாடப்புத்தகங்கள் அதில் இருந்தன.
இந்தப் புத்தகங்கள் மாணவர்களுக்குச் சென்றடைவதற்குப் பதிலாக, சட்டவிரோதமாக பழைய பேப்பர் கடைகளுக்குக் கடத்தப்பட்டன. புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாகக் கணக்குக் காட்டப்பட்டு, வழியிலேயே கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ வெறும் ரூ.4 என்ற விலைக்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவை சட்டவிரோதமாக உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்கப்படவிருந்தது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் அச்சுக்கூடம் (Printing press) மற்றும் சில கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த முறைகேடு தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளான ஷபீக் அகமது மற்றும் அலோக் குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் சிங் மற்றும் பயிற்றுவிப்பாளர் அதுல் குமார் சிங் ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது.
இந்த மோசடியில் ஈடுபட்ட பழைய பேப்பர் வியாபாரி மற்றும் இடைத்தரகர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாரி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருவதாகவும் ராம்கான் ஸ்டேஷன் அதிகாரி குர்சென் சிங் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பஹ்ரைச்சில் உள்ள ஆறு கல்வித் துறை கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களின் நேரடி சரிபார்ப்பு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒருபுறம் பாடநூல்கள் கிடைக்காமல் ஏழை மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் இத்தகைய முறைகேடுகள் நடப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.