

பெட்ரோல் பம்ப்புகளில் ரூ.2,000-க்கு மேல் எரிபொருள் நிரப்பப்படும்போது யுபிஐ கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுமானால், யுபிஐ மூலம் பணம் பெறுவதை நிறுத்திவிட்டு, ரொக்கப் பணத்துக்கு மாறுவோம் என்று பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை எம்டிஆர் கட்டணம் (Merchant Discount Rate -MDR) விதிக்கப்படும். இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என என்சிபிஐ அறிவித்துள்ளது.
இரயில்வே (Railways), தொலைத்தொடர்பு சேவைகள் (Telecom), காப்பீடு (Insurance), எரிபொருள் (Fuel/Petrol Pumps), மற்றும் அரசு பயன்பாட்டு பில் கட்டணங்கள் (Utility bills like electricity, water) போன்ற குறிப்பிட்ட துறைகளில் ரூ.2,000-க்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த ரூ.5 நிலையான கட்டணம் வணிகர்களிடம் வசூலிக்கப்படும். ரூ.2,000-க்கும் குறைவாக நடக்கும் அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளுக்கும் எந்தவித கட்டணமும் கிடையாது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் வணிகர்களுக்கு மட்டுமே (Merchants) பொருந்தும். பொதுமக்கள் தங்களின் அன்றாட UPI பயன்பாட்டிற்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று என்பிசிஐ அறிவித்துள்ளது. மேலும் நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, வணிகர்கள் இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது திணிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்சிபிஐ-ன் இந்த புதிய அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மத்தியில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகக் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் பல நேரங்களில் 2000 ரூபாய்க்கு மேல் தான் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்புவார்கள்.
இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் கேட்க முடியாது என்பதால், தாங்கள் எப்படி அந்த 5 ரூபாயை அரசுக்குச் செலுத்த முடியும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் டீலர்களுக்கு கிடைக்கும் லாபம் தோராயமாக 2.40 முதல் 3.40 ரூபாய் வரை மட்டுமே உள்ளது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மிகக் குறைந்த லாபத்தில், இந்த யூபிஐ (யுபிஐ கட்டணம்) கட்டணத்தையும் எப்படி எங்களால் ஏற்க முடியும் என டெல்லி-என்சிஆர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பங்க் உரிமையாளர்கள் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) மட்டுமே நிர்ணயம் செய்வதால், இந்தக் கட்டணத்தை ஈடுகட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்களால் தாங்களாகவே எரிபொருளின் விலையை உயர்த்த முடியாது.
எனவே, பெட்ரோல் பங்குகளைப் பொறுத்தவரை இந்த ‘எம்டிஆர்’ கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என அகில இந்தியப் பெட்ரோலிய டீலர்கள் சங்கம் (AIPDA) மத்திய நிதியமைச்சருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது.
இந்த விதிமுறைக்கு விலக்கு அளிக்கப்படாவிட்டால், வரும் அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேல் GPay, PhonePe, Paytm போன்ற UPI மூலம் பணம் பெறுவதைத் தவிர்த்து, ரொக்கமாக (Cash) மட்டுமே வாங்கப் போவதாக சில சங்கங்கள் எச்சரித்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த டீலர் ஹேமந்த் சிரோஹி அதிகாரப்பூர்வ யூபிஐ பரிவர்த்தனை தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் கூட்டாக சுமார் 23.9 மில்லியன் யூபிஐ பரிவர்த்தனைகளை கையாளுகின்றன என்றும், அவற்றின் மதிப்பு 1,573 கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார். இதில் சுமார் 20 சதவீத பரிவர்த்தனைகள் 2,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடும் என்கிறார். இந்த புதிய எம்டிஆர் கட்டணம் காரணமாக ஒரு தனிப்பட்ட பெட்ரோல் பங்க்கிற்கு தினசரி தோராயமாக 230 முதல் 250 ரூபாய் வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும். டீலர்கள் மீது ஏற்கனவே சுமைகள் உள்ள நிலையில் இது அவர்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை அரசு இந்த புதிய கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை யூபிஐ மூலமாகப் பெறுவதை முற்றிலுமாக நிறுத்தப் போவதாக உரிமையாளர்கள் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
அவ்வாறு நடந்தால், வாகன ஓட்டிகள் மீண்டும் பணத்தை கொடுத்து பெட்ரோல் போட வேண்டிய பழைய நிலைமைக்கே தள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.