இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இல்லாத இடமே இல்லை. டீக்கடையில் ஆரம்பித்து பிளைட் டிக்கெட் வரை, டிஜிட்டல் முறையிலேயே பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு பல்வேறு விதமான பேமென்ட் தளங்கள் செயலி வடிவில் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் மிகவும் பிரபலமான Paytm செயலி, புதியதாக UPI Lite என்ற அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.
முதல் முறை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இந்தியாவில் பயன்பாட்டில் வந்தபோது, அதில் முக்கிய பங்கு வகித்தது Paytm செயலி தான். பெரும்பாலான மக்கள் அந்த செயலியைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பிறகு போன்-பே, கூகுள்-பே போன்ற நிறுவனங்கள் ஆஃபர் மழையில் மக்களை நனைய வைத்து, பயனர்களை தங்கள் பக்கம் வரவைத்தது. தற்போதும் Paytm தளத்தை பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், UPI Lite என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் பயனர்கள் சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகள் செய்ய ஒவ்வொரு முறையும் UPI பின் உள்ளிட வேண்டிய அவசியமில்லை. UPI என்பது Unified Payment Interface எனப்படும் டிஜிட்டல் பேமெண்ட் அமைப்பாகும். இது வங்கி பணப் பரிவர்த்தனையை நிகழ் நேரத்தில் அனுமதிக்கிறது.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மூலம் வடிவமைக்கப்பட்ட UPI Lite முறை, செப்டம்பர் மாதம் 2022ல் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தொடங்கப் பட்டது.
"முதல் முறை Paytm Payment Bank-ல் UPI Lite முறையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சாதாரணமாக UPI மூலம் 50 சதவீதத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் 200 ரூபாய்க்கு குறைவாகவே இருக்கிறது. எனவே இந்த UPI Lite முறையானது பயனர்களுக்கு வேகமான மற்றும் தடையற்ற குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனங்களை எளிமையாக மேற்கொள்ள உதவியாக இருக்கும். மேலும் upi இயங்குதலத்தில் ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்கு இது முதற்கட்டமாக அமைந்து, பரிவர்த்தனைகளின் வெற்றி விகிதத்தையும் அதிகரிக்கும்" என NPCI-ன் COO பிரவீனா ராய் கூறியுள்ளார்.
UPI Lite பயன்படுத்தி ஒரே கிளிக்கில், 200 ரூபாய் வரை, பின் நம்பர் இல்லாமலேயே பரிவர்த்தனை செய்யலாம். இதற்கு பயனர்கள் தங்களுடைய யுபிஐ லைட் வாலட்டில் ஒரு நாளைக்கு 4000 வரை சேர்த்துக் கொள்ளலாம். இதை ஒரு நாளைக்கு ஒருமுறை 2000 ரூபாய் என இரண்டு முறை மட்டுமே சேர்க்க முடியும். பின் நம்பர் இல்லாமல் செலுத்தும் பணமானது, இந்த வாலட்டில் இருந்து தான் நேரடியாக அனுப்பும் நபருக்கு செல்லும்.
இப்படி செய்யப்படும் பரிவர்த்தனைகள் Paytm-ன் இருப்பு மற்றும் வரலாறு என்னும் பக்கத்தில் மட்டுமே காட்டப்படும். இதனால் சிறிய மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகள், வங்கியின் பேமென்ட் ஹிஸ்டரியில் குப்பைகள் மாதிரி சேராமல் இருப்பது தடுக்கப்படுகிறது. இது இந்திய மக்களுக்கு, குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு புதியதாக வரும் நபர்களுக்கு, எளிமையாக அணுகக்கூடிய வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022 டிசம்பரில் மட்டும் 1726 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனையுடன் பேடிஎம் முதலிடத்தில் இருந்து வருகிறது. NPCI-ன் அறிக்கைப்படி 386 மில்லியன் பதிவு செய்யப்பட்ட UPI பரிவர்த்தனைகள் இதில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் அனைத்துமே டிஜிட்டல் பரிவர்த்தனைகளாக மாறிவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.