IAS கனவோடு இருக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசின் ரூ.25,000 நிதியுதவி பெற அப்ளை பண்ணுங்க!

ஜூன் 15-ல் வெளியான பிரிலிம்ஸ் முடிவுகளில் தேர்ச்சியா? தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு!
ஊக்கத்தொகை
ஊக்கத்தொகை
Updated on

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய யுபிஎஸ்சி மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது.

யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் தேர்வாகி சாதனை படைப்பதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பப் பின்னணியில் இருந்து வரும் திறமையான மாணவ, மாணவிகள் எவ்விதப் பொருளாதாரத் தடையுமின்றி தங்களின் ஐஏஎஸ், ஐபிஎஸ் (IAS/IPS) கனவை நனவாக்கிக்கொள்ள இலவச பயிற்சிகளும் நிதியுதவிகளும் பெரிதும் துணைபுரிகின்றன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நீண்ட காலப்பகுதியில், மாணவர்களின் அன்றாட மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கில் இந்த திட்டம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்தச் சிவில் சர்வீஸ் தேர்வானது முதல்நிலை (Preliminary), முதன்மை (Mains) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) என மூன்று கடினமான கட்டங்களைக் கொண்டதாகும். இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக முதல்நிலைத் தேர்வை எழுதித் தயாரிப்பில் இருக்கும் மாணவர்களின் கல்வி செலவிற்காக மாதம் ரூ. 7,500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அத்தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த கட்டமான முதன்மைத் தேர்விற்கு தகுதி பெறுபவர்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக ரூ. 25,000 தொகையும், இறுதிச் சுற்றான நேர்முக தேர்விற்கு தேர்வாகும் சாதனையாளர்களுக்கு ரூ. 50,000 தொகையும் தமிழ்நாடு அரசால் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

ஊக்கத்தொகை
ஊக்கத்தொகை

அந்த வகையில், தற்போது 2026-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் (UPSC Prelims 2026) கலந்துகொண்டு, அதில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்குத் (Uains) தகுதி பெற்றுள்ள தமிழக மாணவர்கள் இந்த ஊக்கத்தொகையை பெற விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள மாணவர்கள் இந்த நிதியுதவியை பெற்று பயனடையும் வகையில், இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்ப செயல்முறைகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தற்போது முறைப்படி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுதரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி /இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், ஆன்லைன் மூலம் (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/) 19.06.2026 முதல் 30.06.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு 1,016 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த மே 24-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான முடிவுகள் ஜூன் 15-ம் தேதி வெளியாகின. இதில் தேசிய அளவில் 13,343 பேர் தகுதிப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : ஆட்சி மாற்றம்: மகளிர் உரிமை தொகை ரூ.1000 இனி என்னவாகும்?
ஊக்கத்தொகை
logo
Kalki Online
kalkionline.com