'டீல் முடிந்தது..' கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாவுக்கு செக் வைத்த அமெரிக்கா.!

Crude oil
Crude oil
Updated on

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை சமாளிக்கும் விதமாக ரஷ்யாவிடமிருந்து, இந்தியா கச்சா எண்ணெயை வாங்கிக் கொள்ள 1 மாதத்திற்கு தற்காலிகமாக அனுமதி அளித்தது அமெரிக்கா.

கடந்த மார்ச் மாதம் அளிக்கப்பட்ட இந்த அனுமதி ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் எனவும் அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பால், எரிபொருள் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளித்தது இந்தியா. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான இந்தியாவின் அனுமதியை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டால் திணறி வரும் இந்தியாவுக்கு, இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது நடந்தால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், சிலிண்டரின் விலையும் கடந்த மூன்று மாதமாக தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டால், எரிபொருள்களின் விலை மேலும் உயரும் என்பதே நிதர்சனம்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போருக்கு முன்னர், ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 60 முதல் 70 டாலராக இருந்தது. ஆனால் போருக்குப் பிறகு ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டதால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலரையும் கடந்து விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. 60 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கும் சூழலில், இதனை நீட்டிக்க இரு நாடுகளும் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதோடு அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள ஈரான் மறுத்து விட்டதாக நேற்று தகவல் வெளியாகியது. இதற்குப் பிறகு ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தாக்குதல் நடந்ததும் குறிப்பிடத்தக்கது

இதையும் படியுங்கள்:
#BREAKING: பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? பரபரப்பை கிளப்பிய 'அந்த' கடிதம்.!
Crude oil

கடந்த ஆண்டில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியாவின் மீது வரிச்சுமையை அதிகரித்தது அமெரிக்கா. அதன் பிறகு இதில் சுமூகமான முடிவு ஏற்பட்டு, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திய பிறகே, இந்தியாவின் மீதான வரிச் சுமையை அமெரிக்கா குறைத்தது.

அதற்குப் பிறகு அமெரிக்க - ஈரான் போர் தீவிரமடைந்த சூழலில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதை தடுக்கவும், எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்கவும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கிக் கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்தது.

இந்நிலையில் இந்த அனுமதியை தற்போது திரும்ப பெற உள்ளதாக அமெரிக்கா முடிவு செய்திருப்பது, இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை அதிகப்படுத்துவதுடன் விலைவாசியையும் உயர்த்தி விடும். ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ள சூழலில், அமெரிக்காவின் இந்த முடிவு இந்திய மக்களின் செலவை அதிகரிக்கப் போவது உறுதி.

இருப்பினும் அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய, இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப் பயன்படுத்த இனி காசு கட்டணுமா..?பதறாம இதை படிங்க!
Crude oil
logo
Kalki Online
kalkionline.com