

அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளி நாட்டு குடிமக்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கான விசாவினைப் பெறுவதில் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளார். இது அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய விதியின்படி, நீரிழிவு, அதிக உடல் எடை போன்ற சில உடல்நல குறைபாடு கொண்டவர்களுக்கு அமெரிக்கா விசா கிடைக்காமல் போக இனி வாய்ப்புள்ளது.
KFF Health News வெளியிட்டுள்ள அறிக்கையில் உடல் நல பிரச்சினைகளுடன் அமெரிக்கா வருபவர்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவும், அமெரிக்க அரசின் நிதியுதவிகளை நம்பி வாழக்கூடாது என்பதற்காகவும் இந்த புதிய விதி கொண்டுவரப்படுவதாக வெள்ளை இல்லத்தில் இருந்து வெளியான அறிவிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்க வெளிநாட்டு விவகாரத் துறை இது சார்ந்து தூதரகங்களையும், கான்சுலர் அதிகாரிகளையும் விசா விண்ணப்பதாரர்களின் உடல்நலத்தில் முதன்மையாக கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதில், இதய நோய், சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, நரம்பியல் நோய், மனநலம் போன்ற நோய்களின் சிகிச்சைக்காக கோடிக்கணக்கான அமெரிக்க டாலர் செலவாகுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை பெரிதும் முக்கியம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் தங்களின் மனநலம், நீரிழிவு நோய், டி.பி உடல் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, அதிக கொழுப்பு போன்ற உடல் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு அமெரிக்கா விசாவுக்கு இனி விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது சிகிச்சை செலவுகளை அமெரிக்காவின் உதவியின்றி தாமாகவே மேற்கொள்ளும் நிதித் திறன் பெற்றுள்ளதை விசா அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும்அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.. அமெரிக்கா பொதுநிதிக்கு இவர்களின் அமெரிக்க வருகையால் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை விசா அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஊனமுற்றவர்களாகவும், நீண்டகால சிகிச்சை தேவைப்படுபவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரர்களின் அமெரிக்க வருகை அமெரிக்காவில் ஏற்கெனவே பணிபுரிந்து வரும் உறவினர்களின் செயல்திறனில் பாதிப்பை ஏறபடுத்தி விடக் கூடாது என்பதிலும் அமெரிக்கா உறுதியாக உள்ளது.இதன் காரணமாக அமெரிக்காவில் நிரந்தர குடியிருப்பு பெற விரும்புவோர்களுக்கான நிபந்தனைகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் தெரிய வருகிறது.
இந்த முடிவு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் மருத்துவ சங்கங்களின் எதிர்ப்பை பெற்றுள்ளது. உடல்நல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு ஒருவரை விசா வழங்க மறுப்பது அநீதியாகும் என அவர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் டிரம்ப் நிர்வாகம், அமெரிக்க நிதி வளங்கள் வெளிநாட்டவர்களின் சிகிச்சைக்காக வீணாகக் கூடாது என தன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.