

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளர் கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர்கள் கொடுக்க வேண்டிய விவரங்கள் என்ன? என்பது பற்றி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2005-ம் ஆண்டுக்கு பின்னர், அதாவது 20 ஆண்டுகளுக்குபின் தற்போது சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளபடுகிறது.
கடந்த 4-ம்தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு, வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர்.
அதன்படி, இந்த பணியை 4 கட்டமாக பிரித்து கொள்ளலாம். முதல் கட்டமாக, கடந்த 4-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் கொடுப்பார்கள். 2-ம் கட்டமாக 9-ந் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படும்.
3-ம் கட்டமாக ஆட்சேபனைகள், கோரிக்கைகள் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை பெறப்படும். 4-ம் கட்டமாக பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஆகியவை மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியிடப்படும்.
இந்த படிவங்களை நிரப்புவதற்கு வசதியாக 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் தேடல் வசதி செய்யப்பட்டுள்ளது. https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அதை காணலாம். வாக்காளர் அடையாள அட்டை நம்பரை பயன்படுத்தி தங்களின் விவரங்களை தேடிக்கொள்ளலாம்.
இந்த கணக்கீட்டு படிவம் குறித்த சந்தேகங்கள் எழுந்தால் வாக்காளர் உதவி நம்பரான 1950 மற்றும் வாட்ஸ்ஆப் குறைதீர் நம்பரான 9444123456 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் எழும் சந்தேகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம்.
இதற்காக ECINET செயலி அல்லது https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு, book a call with BLO என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து, செல்போன் நம்பரை அதில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து வாக்காளருக்கு போன் அழைப்பு வரும்.
கடந்த தீவிர திருத்த பட்டியல்களில் பெயர் இருந்தால், கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களான, வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்), உறவினரின் பெயர், உறவு (முறை), மாவட்டம், மாநிலம், சட்டமன்ற தொகுதி பெயர், எண், பகுதி எண், வரிசை எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
கணக்கீட்டு படிவத்தில் ஏற்கனவே சில விவரங்கள் நிரப்பப்பட்டு இருக்கும். அதில் புகைப்படமும் இருக்கும். அதில் கூடுதலாக, பிறந்த தேதி, ஆதார் எண் (விருப்பம்), செல்போன் எண், தாய் அல்லது தந்தை அல்லது கணவர் அல்லது மனைவியின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்) அவற்றை வாக்காளர் குறிப்பிட வேண்டும்.