
இந்தியா - அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வென்ஸ் JD Vance தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணமாக இன்று (திங்கட்கிழமை) காலை புது தில்லி வந்தடைந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷா வென்ஸ் (Usha Vance) மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ள இவர், வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை இந்தியாவில் இருப்பார். அவருடன் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளும் வந்துள்ளனர்.
தில்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வருகையை ஒட்டி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தில்லியில் உள்ள அக்சர்தாம் (Akshardham) கோயிலுக்கு அவர் தனது குடும்பத்துடன் சென்றார். இன்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லியில் தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) வென்ஸ் குடும்பத்தினர் ஜெய்ப்பூருக்கு பயணிக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 23 ஆம் தேதி (புதன்கிழமை) ஆக்ராவிற்குச் செல்கின்றனர். அங்குள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலைக் காண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பல உலகத் தலைவர்கள் தாஜ்மஹாலைக் கண்டு வியந்துள்ளனர், இதில் கடந்த 2020 இல் வந்த அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் அடங்குவர்.
இதற்கிடையே, உஷா வென்ஸின் பூர்வீக கிராமம் என்று கருதப்படும், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ‘வட்லுரு (Vadluru)’ கிராமத்தில் உற்சாகம் நிலவுகிறது. தங்கள் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண்மணி வருவதை கிராம மக்கள் பெருமையுடன் கொண்டாடுகின்றனர். ஒருவேளை வென்ஸ் குடும்பத்தினர் தங்கள் கிராமத்திற்கும் வரலாம் எனவும் எதிர்பார்க்கின்றனர்.
உயர் மட்ட சந்திப்புகள் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான பயணங்களுடன், துணை அதிபர் வென்ஸின் இந்த நான்கு நாள் இந்தியப் பயணம், இரு நாடுகளின் உறவில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. தனது பயணத்தை முடித்துக்கொண்டு அவர் வரும் வியாழக்கிழமை காலை 6:40 மணிக்கு இந்தியாவிலிருந்து புறப்படவுள்ளார்.