உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஓநாய்கள் தாக்கியதில் 40 கிராமங்களை சேர்ந்த சிறு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் காயமடைந்த நிலையில், கொலைக்கார ஓநாய்களை கண்டதும் சுட அம்மாநில முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார். மார்ச் மாதத்திலிருந்து குழந்தைகள் உட்பட மனிதர்கள் மீது ஓநாய் தாக்குதல்கள நடைபெற்று வருகின்றன. அதேநேரம் மழைக்காலத்தில் ஜூலை 17 முதல் அவை தினசரி அளவில் நடைபெற ஆரம்பித்தது.
இதுவரை 4 ஓநாய்கள் பிடிபட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு ஓநாய்கள் பிடிபடாமல் இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொலைகளை ஒற்றை ஓநாய் செய்ததா? அல்லது கூட்டமாக செய்ததா என்று முடிவு தெரியவில்லை. ஓநாய்களை தேட தெர்மல் டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வன அதிகாரிகள் செப் 3 ஒரு நாள் தான், இரவு ஓநாய் தாக்குதல் சம்பவங்கள் எதுவும் இல்லாமல் கடந்துள்ளது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் மெஹ்சி தெஹ்சில் குடியிருப்பாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு ஓநாய்கள் 'பழிவாங்க முயல்வது' காரணமாக இருக்கலாம் என்று ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "ஓநாய்கள் மற்ற வேட்டையாடும் விலங்குகளைப் போலல்லாமல்,அதிகம் பழிவாங்கும் போக்கைக் கொண்டுள்ளன. கடந்த காலங்களில், மனிதர்கள் மூலம் தங்கள் குட்டிகளுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த தாக்குதல்கள் பழிவாங்கும் விதமாக நடக்கின்றன .
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு 1996 இல் , உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மற்றும் பிரதாப்கர் மாவட்டங்களில் உள்ள சாய் ஆற்றின் படுகை பகுதியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஓநாய்களால் கொல்லப்பட்டனர். விசாரணையில், சில குழந்தைகள் விளையாட்டில் இரண்டு ஓநாய் குட்டிகளை கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்போது ஓநாய்கள் பழிவாங்கும் எண்ணத்துடன் அப்பகுதியில் உள்ள குழந்தைகளை எல்லாம் கொன்றுள்ளன.
அப்போது வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சில ஓநாய்களை பிடித்தனர். ஆனாலும் குழந்தைகளை வேட்டையாடிய ஓநாய் ஜோடி எளிதில் பிடிபடவில்லை. இறுதியில், அடையாளம் காணப்பட்டு சுடப்பட்டது.
தற்போது பஹ்ரச்சில் கடந்த பிப்ரவரி மாதத்தில் டிராக்டரில் சக்கரங்களில் சிக்கி இரண்டு ஓநாய் குட்டிகள் இறந்தன. இதில் ஆத்திரமடைந்த ஓநாய்கள் உள்ளூர்வாசிகளைத் தாக்கத் தொடங்கியதால், அவற்றை பிடித்து 40 கிமீ தொலைவில் உள்ள சாக்கியா காட்டில் வனத்துறையினர் விட்டனர். சாக்கியா காடு ஓநாய்களுக்கு இயற்கையான வசிப்பிடம் இல்லை. அதே ஓநாய்கள் திரும்பி வந்து பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல்களை நடத்தி இருக்க வாய்ப்புள்ளது," என்று கூறினார்.
பஹ்ரைச்சின் வன அதிகாரி அஜித் பிரதாப்சிங் கூறுகையில், சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகளுக்கு கூட பழிவாங்கும் போக்கு இல்லை. ஓநாய்களுக்குத்தான் அதிகமாக உள்ளது.
"ஓநாய்களின் வாழ்விடத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அவற்றின் குட்டிகளைப் பிடிக்கவோ அல்லது கொல்லவோ முயற்சித்தால், அவை மனிதர்களை வேட்டையாடுவதன் மூலம் பழிவாங்குகின்றன," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், ஓநாய்களின் தாக்குதலினால் பஹ்ரைச் மாவட்ட மக்கள் கடும் பீதியில் உள்ளதால் மாநில முதல்வர் தாக்குதல் நடத்தும் ஓநாய்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளார்.