
தமிழ்நாட்டில் 3,274 டிரைவருடன் கண்டக்டர் (Driver-Cum-Conductor) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்தப் பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 22,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான எழுத்துத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜூலை 27 இல் இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தான் அரசு விரைவுப் போக்குவரத்தில் 648 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதோடு கருணை அடிப்படையிலும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் வாரிசுதாரர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து டிரைவருடன் கண்டக்டர் (DCC) காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மார்ச் மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தனர். இதற்கான எழுத்துத் தேர்வை நோக்கி காத்துக் கொண்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் எனவும், இதற்கான தேர்வுக்கான நுழைவுச்சீட்டை ஜூலை 21 முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 8 கோட்டங்கள் உள்ளன. இதில் கும்பகோணம் கோட்டத்தில் அதிகபட்சமாக 756 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் சேலம் கோட்டத்தில் 486, திருநெல்வேலி கோட்டத்தில் 362, சென்னை விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 364, கோவை கோட்டத்தில் 344, விழுப்புரம் மற்றும் மதுரை கோட்டத்தில் தலா 322 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 15 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாளை அண்ணா பல்கலைக்கழகம் தயார் செய்துள்ளது. எழுத்துத் தேர்வு முடிந்த பிறகு செய்முறைத் தேர்வு நடைபெறும். காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப போக்குவரத்துக் கழகம் துரிதமாக செயல்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.