
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகவும், சோழநாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும் திகழ்கிறது. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோவில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரங்கம் கோவில் ஏறத்தாழ 156 ஏக்கர் பரப்பளவில் அதாவது 6,31,000 சதுர மீட்டர் கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.
திருவரங்கப் பெருமாள் தென்திசை நோக்கி பள்ளி கொண்டிருக்கிறார். குணதிசை முடியை வைத்து, குடதிசை பாதம் நீட்டி, வடதிசை முதுகு காட்டி, தென்திசை இலங்கை நோக்கி அரிதுயிலில் இருப்பதை காணும் பக்தர்கள் பரவசம் அடைகிறார்கள். அரங்கன் மீது கொண்ட காதலால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருவரங்கம் வந்தவர் ஆண்டாள். அவரையே மணக்க விரும்பி அரங்கன் சந்நிதியில் திருமணத்தூணில் புகுந்து மறைந்தார் என்பது வரலாறு.
ஸ்ரீரங்கம் கோவிலின் தாயார் சந்நிதிக்கு வெளியே இருக்கும், ஐந்து குழி மூன்று வாசல் அற்புதமானது. இங்குள்ள ஐந்து குழிகள் வழியே, ஐந்து விரல்களை வைத்து தெற்கு பக்கம் பார்த்தால் பரமபத வாசல் தெரியும். இப்படித்தான் தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம். அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிப்பதே ஐந்து குழி என்றும் மூன்று வாசல் என்பது பிரம்மத்தின் வழி என்பதும் பெரியோர்கள் வாக்கு.
பொதுவாக கோவில்களில் வருடத்தில் ஒன்றோ இரண்டோ விழாக்கள் நடக்கும். ஆனால்,108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதுமட்டுமல்ல, பெருமாள் வீதியில் உலா வரும்போது அவருக்கு முன்பாக தமிழ் மறை ஓதுவதும் இங்குள்ள சிறப்பாகும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதில் பகல் பத்து உற்சவம் 31-ந்தேதி முதல், ஜனவரி 9-ந்தேதி வரையிலும், ராப்பத்து உற்சவம் ஜனவரி 10-ந்தேதி முதல், 20-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு அடுத்த மாதம் (ஜனவரி) 10ந்தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சொர்க்கவாசல் வழிபாடு என்பது, பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி நாளில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு வழிபாடு ஆகும். இந்த வழிபாட்டில், பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி வழிபாடு செய்வார்கள்.
வைகுண்ட ஏகாதசி நாளில், பகவான் விஷ்ணுவின் நாமம் சொல்லி, அவன் சிந்தனையாகவே இருந்து சொர்க்கவாசல் வழியாக சென்று வணங்கினால் பிறவிப்பயனை அடையலாம் என்பது நம்பிக்கை.