ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி ஆலயம் 108 வைணவத் திருத்தலங்களில் முதல் திருத்தலமாகும். இது பூலோக வைகுண்டம் எனும் சிறப்புப் பெயரையும் பெற்றது. 15ம் நூற்றாண்டில், சுல்தானின் படைகள் ஸ்ரீரங்கம் கோயில் பொக்கிஷத்தைக் கொள்ளை அடிப்பதற்காக வந்தபோது அந்தச் செயலை தடுத்து நிறுத்த, தனது இன்னுயிரை ஈந்த வெள்ளையம்மாள் என்கிற பெண்மணியின் தியாக வரலாற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ராஜகோபுரம்: மிகப்பெரிய ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் ராஜகோபுரம் 72 மீட்டர் உயரத்துடன் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இந்தக் கோயிலில் ஒரே ஒரு கோபுரத்தைத் தவிர மற்ற கோபுரங்கள் பல வண்ணங்களில் வர்ணம் தீட்டப்பட்டு, அழகாகக் காட்சியளிக்கின்றன. அந்த ஒரு கோபுரம், கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிழக்குக் கோபுரம் மட்டும் வர்ணப் பூச்சுகள் எதுவும் இன்றி வெள்ளையாகக் காட்சி அளிக்கிறது. இதற்கு ‘வெள்ளை கோபுரம்’ என்று பெயர்.
வெள்ளை கோபுரம்: வெள்ளை கோபுரம் வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் ராஜகோபுரத்தை விட சிறப்பு வாய்ந்தது. 1987ம் ஆண்டு நடைபெற்ற இக்கோயில் திருப்பணிகளின்போது ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதற்கு முன்பு வரை இக்கோயிலின் வெள்ளை கோபுரம்தான் ராஜ கோபுரமாக விளங்கியது. இந்த வெள்ளை கோபுரத்தின் பின்னணியில் ஒரு பெண்ணின் தியாக வரலாறு உள்ளது.
அரங்கநாதர் கோயில் பொக்கிஷங்கள்: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரங்கநாதர் கோயில் கட்டப்பட்டு சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் காலத்தில் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள செல்வந்தர்கள் மற்றும் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், ரங்கநாதப் பெருமாளுக்கு காணிக்கையாக பொன், பொருள், வைடூரியங்களை ஏராளமான அளவில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
இந்தியாவில் மன்னர் ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் சுல்தான்களின் படையெடுப்பினால் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இருந்த ஏராளமான பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அந்நிய படையெடுப்புகளால் ஸ்ரீரங்கம் கோயில் பலமுறை சூறையாடப்பட்டு அதிலிருந்த பொன் பொருட்கள் எல்லாம் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன என்கிறது வரலாறு.
சுல்தானின் பேராசை: 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரையை ஆண்ட சுல்தான், ஸ்ரீரங்கம் கோயிலை கொள்ளையடிப்பதற்காக தனது பெரும் படையுடன் வந்தார். ஏராளமான பொன், வைடூரிய பொருட்கள் மற்றும் ஆபரணங்களைக் கொள்ளையடித்த பின்பும் அந்த இடத்தை விட்டுச் செல்ல, அந்தப் படைத் தளபதிக்கு மனம் இல்லை. கோயிலில் இன்னும் ஏராளமான விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இருக்கின்றன. அவற்றையும் கவர்ந்த பின்னரே செல்ல வேண்டும் என்று திட்டம் திட்டி இருந்தான்.
தியாக வரலாறு: மீதமுள்ள அரங்கநாதர் கோயில் பொக்கிஷங்களைக் காக்க வெள்ளையம்மாள் என்கிற பெண்மணி முடிவு செய்தாள். அவள் அந்தக் கோயிலில் நடனமாடும் பெண்மணி. ஸ்ரீரங்கநாதர் மேல் அளவற்ற பக்தி கொண்ட அந்தப் பெண் ஒரு திட்டம் தீட்டினாள். படைத் தளபதியிடம் நெருங்கிப் பழகி பொக்கிஷ அறையைத் தான் காட்டுவதாக ஆசை வார்த்தைகள் கூறினாள்.
அதனை நம்பிய அந்த படைத் தளபதியை அவள் வெள்ளைக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றாள். அவன் எதிர்பாராத நேரத்தில் கோபுரத்தின் உச்சியில் இருந்து அவனை கீழே தள்ளி விட்டாள். அவனும் கோபுர உச்சியில் இருந்து விழுந்து இறந்தான். பிறகு தானும் அந்தக் கோபுரத்தின் மேல் இருந்து குதித்து தனது உயிரை அப்பெண் மாய்த்துக் கொண்டாள். வெள்ளையம்மாளின் தியாகத்தை எடுத்துச் சொல்லும் விதமாக இக்கோபுரம் ‘வெள்ளை கோபுரம்’ என்ற பெயரோடு வரலாற்றில் நிலைத்திருக்கிறது. இன்றளவும்கூட அந்தக் கோபுரம் வர்ணம் பூசப்படாமல் வெள்ளையாகவே அப்பெண்ணின் தியாகத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.