

'வந்தே மாதரம்' தேசியப் பாடலை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழக்கம் புதிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நம் நாட்டின் தேசிய பாடலான "வந்தே மாதரம்" இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் அரசு நிகழ்ச்சிகளில் மத்திய அரசு பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.அரசு நிகழ்ச்சிகள் துவக்கத்திலும், இறுதியிலும் தேசிய பாடலான வந்தே மாதரம், தேசிய கீதமான ஜன கண மன பாடல் பாட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.
‘வந்தே மாதரம்’ பாடப்படும் போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும், இந்தப் புதிய விதிமுறை குறிப்பிடுகிறது. 3.10 நிமிடங்கள் கொண்ட 6 சரணங்களையும் முழுமையாக பாட வேண்டும்.நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழா, ஆளுநர், குடியரசுத் தலைவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவரின் வருகை மற்றும் புறப்படும் நேரங்களில் ‘வந்தே மாதரம்’ ஒலிக்கப்பட வேண்டும். திரையரங்குகள் போன்ற பொது இடங்களிலும் இந்த பாடல் ஒலிக்கப்படும். இருப்பினும் அங்கு பொதுமக்கள் எழுந்து நிற்க வேண்டிய கட்டாயமில்லை.
இந்நிலையில், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்தை வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்கும் வகையில், 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026' மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இப்பாடலுக்கு இடையூறு விளைவித்தாலோ அல்லது அவமரியாதை செய்தாலோ சிறை தண்டனை கிடைக்க வழி வகை செய்யும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தாக்கல் செய்தார்.வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழி வகுக்கும் 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026'-ஐ கடந்த 24-ஆம் தேதி நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.வந்தே மாதரம் பாடலின் கண்ணியத்தையும், பெருமையையும் பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.
இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மசோதாவை வரவேற்று பேசிய பாஜகவினர், "சமீபகாலமாக வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று பெற்றுள்ளது. எனவே எங்கு பாடப்பட்டாலும் அதற்குரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும் என்பதே சரியான நடமுறையாக இருக்கும்" என்றனர்.
'வந்தே மாதரம்' பாடல் பாடப்படும்போது வேண்டுமென்றே இடையூறு விளைவிப்பது, தடுப்பது அல்லது அவமதிப்பு செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க இச்சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.
மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு பாஜக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், சிபிஎம் (CPI-M) மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன."பாடல் பாடுவதை குற்றவியல் சட்டத்துடன் இணைப்பது தவறானது. இந்த சட்ட திருத்தம் பேச்சுரிமை, தனி மனித சுதந்திரம் மற்றும் வழிகாட்டு உரிமையை வழங்கும் அரசியல் சாசன பிரிவுக்கு எதிரானது. குடிமக்கள் கட்டாயம் தேசப்பற்றை காட்ட வேண்டும் என அரசியல் சாசனம் எங்கும் கூறவில்லை" என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டால், குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்ற பிறகு சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.