

இந்தியாவின் ஆன்மிக தலைநகரமாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி (முன்பு காசி) திகழ்கிறது. புனித கங்கை நதி பாயும் இந்த வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில், கவுதம புத்தர் முதன்முதலில் தர்மத்தை போதித்த இடமாக கூறப்படும் சாரநாத் உள்ளிட்ட முக்கிய இடங்கள் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களாகும்.
வாரணாசி தற்போது பிரமாண்டமான வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. அந்த வகையில், குறுகிய தெருக்களும், நெரிசலான சாலைகளும் மட்டுமே வாரணாசியின் அடையாளமாக இருந்த நிலை மாறி இன்று சர்வதேச தரத்திலான சாலைகள், பாலங்கள், கப்பல் போக்குவரத்து என பெரும் மாற்றத்தை கண்டுள்ளது.
நாள்தோறும் வாரணாசியில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், ரோப் கார் வசதியை ஏற்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதாவது, வாரணாசியில் மெட்ரோ ரெயில் இயக்க சாத்தியக்கூறுகள் இல்லாததால் ரூ.800 கோடியில் ‘ரோப் கார்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்தியாவிலேயே முதல்முறையாக பொது போக்குவரத்துக்காக காசியில் ரோப் கார் செயல்படுத்தப்படுகிறது. வாரணாசி ரெயில் நிலையத்தில் இருந்து காசி விஸ்வநாதர் கோவில் வரை சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு இது அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2026-ம் ஆண்டு மே மாதத்துக்குள், வாரணாசி ரெயில் நிலையத்திலிருந்து, ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவிலுக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ரெயில் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல சாலை வழியில் 1 மணி நேரமாகிறது. ரோப் கார் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் 15 நிமிடங்களில் சென்றடையலாம். அடுத்த ஆண்டு (2026) மே மாதத்துக்குள் இது பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி வாரணாசியில் அதன் பழமைமாறாமல் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டு,இதற்காக ரூ.60,000 கோடியில் ஒரு விரிவான போக்குவரத்து திட்டம் வகுக்கப்பட்டு ரூ.40,000 கோடி மதிப்பிலான பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
இங்கு முன்பு வெளிவட்ட சாலைகள் (ரிங் ரோடு) இல்லாததால் அதிகபட்சம் 7 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது. குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் வர 3 மணி நேரமாகும்.ஆனால், தற்போது புதிய ‘ரிங் ரோடு’ மற்றும் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்கள் காரணமாக பயண நேரம் 40 நிமிடங்களாக குறைந்துள்ளன.