
உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோவிலாகும். வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோவில் என அழைக்கப்படுகின்றது. இக்கோவிலின் உயரம் 51 அடிகளாகும். இந்தியாவில் 12 ஜோதிலிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது.
வாரணாசியின் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த தசவசுவமேத படித்துறையில் நாள்தோறும் மாலை நேரத்தில் கங்கை ஆறுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை கங்கா ஆரத்தி என்கின்றனர். இந்த கங்கா ஆர்த்தியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் மணிக்கணக்கில் காத்திருந்து வழிபாடு செய்வார்கள்.
வாரணாசியில் ஓடும் கங்கை நதி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. காசி யாத்திரை மேற்கொள்வது பாவங்களை நீக்கி, புண்ணியத்தையும், மோட்சத்தையும் தரும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் எச்சரிக்கை சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் காசி விஸ்வநாதரை தரிசிக்க வரும் போது பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புனித தலமாகக் கருதப்படும் இந்த ஆலயத்தின் புனிதத்தைக் காக்கவும், தூய்மையைப் பராமரிக்கவும், பிளாஸ்டிக் இல்லாத சுத்தமான ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 11-ம்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11-ம்தேதி முதல் பக்தர்கள் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீரை கொண்டு வந்தால் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக ஏற்கனவே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கோவிலின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வபூஷன் மிஸ்ரா கூறுகையில், காசி விஸ்வநாதர் கோவில் ஆன்மிக தளமாக மட்டுமின்றி, தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் ஒரு முன்மாதிரியாக மாற வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
காசி விஸ்வநாதரை தரிசிக்க நாடு முழுவதும் வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வருவதைத் தவிர்த்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் பக்தர்கள் கோவிலுக்குள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்கும் பொருட்டு கோவிலின் நுழைவு வாயில்களிலும் பிளாஸ்டிக் சோதனைகள் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காசி விஸ்வநாதர் கோவிலின் இந்த முயற்சிக்கு நகராட்சி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு வரும் பெண்கள் சேலை அணிந்துதான் கோவிலுக்குள் வர வேண்டும். ஆண்கள் அரைகால் சட்டை, கையில்லாத மேல் சட்டை மற்றும் பனியன் அணிந்து கோவிலுக்குள் வர அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.