பரபரக்கும் அரசியல் களம் : வீரப்பனை என்கவுன்டர் செய்த ஏடிஎஸ்பி - சசிகலா திடீர் சந்திப்பு..!

sasikala
sasikala
Published on

தமிழக அரசியலில் தினம் தினம் ஏதேனும் ஒரு புதிய திருப்பம் வந்து கொண்டே இருக்கிறது. தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதால் தினமும் ஒவ்வொரு புதிய அறிவிப்பும் , புதிய சந்திப்புகளும் நடைபெற்று வருகின்றன. அதுபோல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று புகழ்பெற்ற ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை, அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் திருமதி.சசிகலா அவர்களை சந்தித்துள்ளது, தமிழக அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.

தமிழக காவல்துறையின் முன்னாள் அதிகாரியான ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை துணிச்சலுக்கும் தைரியத்திற்கும் பெயர் போனவர். தமிழகத்தில் காவல் துறையினரால் வீழ்த்தவே முடியாது என்று கூறப்பட்ட பல ரவுடிகளை வெற்றிகரமாக என்கவுண்டர் செய்தவர். வெள்ளத்துரை ஒரு ஏரியாவுக்குள் மாறுதலாகி வருகிறார் என்றாலே ,அந்த ஏரியாவுக்குள் உள்ள ரவுடிகள் அனைவரும் உடனடியாக வேறு மாநிலங்களுக்கு சென்று விடுவார்கள். அந்த அளவிற்கு ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை மீது குற்றவாளிகளுக்கு கடுமையான பயம் இருந்தது. மேலும் , ஏதேனும் என்கவுண்டர் திட்டம் இருந்தால் தான் அவரையும் அந்த பகுதிக்கு மாறுதல் செய்வார்கள்.

2003 ஆம் ஆண்டு வெள்ளைத்துரை, ரவுடி அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்ததில் இருந்து தமிழகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டார். அதன் பின்னால் பல ரவுடிகளை என்கவுண்டர் செய்து பிரபலமாகி இருந்தார். திடீரென்று சில மாதங்கள் அவரைப் பற்றிய செய்திகள் பொதுவெளியில் வராமல் இருந்தது. ஆபரேஷன் கூகூன் மூலம் 2004 ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளை என்கவுண்டர் செய்து பெரும் புகழைப் பெற்றார் வெள்ளைத் துரை. இந்த என்கவுண்டருக்கு பிறகு அவருக்கு தமிழக அரசால் பதவி உயர்வும் அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னர் , வெள்ளைத்துரை ஒரு கைதி மரணம் அடைந்த குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், சில மணி நேரங்களிலேயே அந்த சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தற்போது ஓய்வில் உள்ள வெள்ளைத்துரை, அதிமுகவின் ஒரு பிரிவை சேர்ந்த திருமதி சசிகலா அவர்களை சந்தித்துள்ளது , அரசியலில் சூட்டை கிளப்பி உள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியின் மீது, அதன் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா வழக்கு தொடுத்து தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அதிமுகவுடன் சசிகலாவின் அக்கா மகனான டிடிவி தினகரன் கூட்டணி வைத்தலிருந்து இருவருக்கும் இடையே புகைச்சல் நிலவுகிறது.

இதன் பின்னணியில் திருமதி சசிகலா தற்போது மீண்டும் அரசியல் களத்தில் இறங்க உள்ளதாக , சில செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அமமுகவை சேர்ந்த ஒரு சில நிர்வாகிகள் சசிகலாவை தொடர்ச்சியாக சந்தித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி வெள்ளத்துரை போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து தேர்தல் பற்றி ஆலோசனை செய்துள்ளார்.

சசிகலாவும் தற்போது அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. திருநெல்வேலி பகுதியில் ஏடிஎஸ்பி பணியிலிருந்த வெள்ளைத்துரை அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அம்பாசமுத்திரம் தொகுதியில் வெள்ளத்துரையின் மனைவி ராணிரஞ்சிதம் அமமுக சார்பில் போட்டியிட்டார். தற்போது வெள்ளைத்துரை தேர்தலில் போட்டியிட அதிக ஆர்வம் காட்டுகிறார்.

இதையும் படியுங்கள்:
பிப்ரவரி 24: அதிரப்போகும் தமிழக அரசியல்! - வேட்பாளர் பட்டியலுடன் களமிறங்கும் அதிமுக..!!
sasikala

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com