

அதிமுகவின் அதிருப்தி அணியில் இருப்பவர்களின் பார்வை விஜய்யை நோக்கி திரும்பியுள்ளது. அதிமுகவிலிருந்து புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகள் , தங்களின் புகலிடமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை கருதுகின்றனர். இவர்களுக்கு பாஜக கூட்டணியில் இடம் இருந்தாலும் , அதிமுகவின் வெற்றிக்காக தாங்கள் மீண்டும் உழைக்க வேண்டும் என்ற ஆதங்கம் உள்ளது. இவர்களின் பெரும்பாலானவர்கள் நோக்கம், தாங்கள் அரசியலில் வெற்றி பெறுவதை விட, அதிமுகவை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றனர்.
இதன் காரணமாக , அதிமுகவின் அதிருப்தி அணியில் இருப்பவர்கள் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் அதிமுகவின் முன்னாள் முக்கிய தலைவரான செங்கோட்டையன் தான். இவருக்கு தவெக கட்சியில் நல்ல மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறது. இதைப் பார்த்த மற்ற நிர்வாகிகள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வருகின்றனர். செங்கோட்டையனும் அதிமுகவிலிருந்து பலரையும் தங்களது கட்சிக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் , தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர் செல்வத்தின் வலதுகரமாக திகழ்ந்த வி.ஆர்.ராஜ்மோகன் இன்று தவெகவில் இணைய உள்ளார் என்ற செய்தி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.ஆர். ராஜ்மோகன் பிரபல எழுத்தாளரும் , சினிமா நடிகருமான வேல.ராமமூர்த்தியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தை சேர்ந்த எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி குற்றப்பரம்பரை நாவல் மூலமாக தமிழகம் முழுவதும் பெயர் பெற்றவர்.இவர் மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். தொடர்ச்சியாக தென் மாவட்டங்கள் சார்ந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரிலும் நடித்து வருகிறார். இவரது மகன் ராஜ்மோகன் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் பரிந்துரையின் பெயரில் இணைந்தார். அந்தக் காலகட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் , உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் இவர் கட்டாயம் இடம் பெறுவார். அவரது பயணங்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளை செய்து வந்தார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இடையில் விரிசல் வந்து , ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போது , வி.ஆர். ராஜ்மோகனும் அவருடன் இணைந்து வெளியேறினார். பின்னர் அதிமுக மீட்பு கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் பதவியை பெற்றார். தீவிர விசுவாசியாக இருந்த இவர், சில மாதங்களுக்கு முன்னால் பன்னீர்செல்வத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக , தனது பொறுப்புகளை விடுவித்துக் கொண்டு கட்சியில் இருந்து வெளியேறினார்.
கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த ராஜமோகன் தேர்தல் நேரத்தில் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பேத்தி மயூரி உள்ளிட்ட பல முக்கியமான நபர்கள் இன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்துள்ளனர்.
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், அவரது கட்சியில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று இணைந்தனர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பேத்தி மயூரி, வேலு நாச்சியார் குடும்ப உறுப்பினர், தலித் எழில்மலையின் மூன்றாவது மகள் கேத்ரின், அரங்கநாதன் பேரன், எழுத்தாளரும் நடிகருமான வேலா ராமமூர்த்தியின் மகனும், ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்தவருமான ராஜ் மோகன் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.
தவெகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக பன்னீர்செல்வமும் , டிடிவி தினகரனும் தவெக கூட்டணியில் இணைவார்கள் என்று கூறிய நிலையில் ராஜ்மோகன் இணைவது முக்கியத்துவம் பெறுகிறது .