

சென்னையில் தற்போது கடற்கரை முதல் வேளச்சேரி வரை மட்டுமே உள்ள பறக்கும் ரெயில் சேவை (MRTS) பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ரெயில் சேவை கடந்த 1997-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடத்தில் தினமும் 100 சர்வீஸ்களான மின்சார ரெயில்கள் இயக்கப்படும் நிலையில், தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். சென்டரலில் உள்ள பூங்கா ரெயில் நிலையத்தில் ஏறும் மேம்பாலம், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, லைட் ஹைவுஸ், முண்டகக்கன்னியம்மன் கோவில், திருமயிலை, மந்தைவெளி, பசுமைவெளிச்சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரி பாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய ரெயில் நிலையங்களில் முடிகிறது. வேளச்சேரியில் தான் தரையில் ரெயில் நிலையம் வருகிறது.
இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது அவ்வாறு நீட்டித்தால் புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி, இந்தத் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதனிடையே வேளச்சேரி - பரங்கிமலை 5 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில், இந்த திட்டத்தில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வந்த நிலையில், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே 500 மீட்டர் பாதையை அமைக்கும் பணியின் போது, நிலம் கையகப்படுத்துவது, கோர்ட் வழக்கு போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக முட்டுக்கட்டை ஏற்பட்டதால் கிட்டதட்ட 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.
பின்னர் கோர்ட்டு மூலம் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைகளுக்கு 2022ம் ஆண்டு தீர்வு கிடைத்த நிலையில், கிட்டதட்ட 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கிய நிலையில் எஞ்சிய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் தண்டவாளம் பணி மற்றும் மின்மயமாக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. எஞ்சிய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வருகிற டிசம்பர் மாதம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஜனவரி மாதம் இறுதியில் இந்தப் பாதையில் சேவை தொடங்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்த பின்னர் தேதி உறுதி செய்யப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
ஜனவரியில் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரெயில் வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தால், பரங்கிமலை ரெயில் நிலையம் அதாவது மௌண்ட் ரெயில் நிலையம், தாம்பரம் போல் மிக மிக முக்கியமான ரெயில் நிலையம் ஆக உருவெடுக்கும். அதுமட்டுமின்றி இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.