செம அறிவிப்பு! மெட்ரோவுடன் இணையும் பறக்கும் இரயில் சேவை..!

Metro - MRTS trains
Metro Train
Published on

சென்னையில் பெரும்பாலான மக்கள் இரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை மின்சார இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் தினசரி 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் புறநகர் இரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் இரயில் (MRTS) சேவையை, சென்னை மெட்ரோ இரயில் சேவையுடன் இணைப்பதற்கு மத்திய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பறக்கும் இரயில் சேவையை மெட்ரோவுடன் இணைக்க தமிழக அரசும், தெற்கு இரயில்வே நிர்வாகமும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தன. பறக்கும் இரயில் மெட்ரோவுடன் இணைந்தால், கூட்ட நெரிசலைக் குறைக்க முடியும்; அதோடு பொது போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்த முடியும்.

தெற்கு இரயில்வேயின் பரிந்துரை மற்றும் இரயில்வே வாரியத்திற்குள் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து இந்த இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் புறநகர் இரயில் சேவைகள் உள்பட பேருந்து சேவைகளும் அடங்கும். மத்திய அரசின் ஒப்புதலுக்கான முறையான தகவல் கடந்த ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பறக்கும் இரயில் நிர்வாகத்தின் சொத்துக்கள் மற்றும் செயல்பாடுகளை மாற்றுவது குறித்து விரிவான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தயாரிக்கப்பட்டு வருகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே பணிகளைத் தொடங்கி விட்டது மெட்ரோ நிர்வாகம். நடப்பாண்டு இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பறக்கும் இரயில் தண்டவாளங்கள், சமிக்ஞைகள், பாலங்கள், மின்மயமாக்கல் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றை தமிழக அரசு பராமரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது MRTS வசமுள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இடங்கள், மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே திருப்பியளிக்கப்படும். மின்சாரக் கடன் சங்கங்களும் தமிழக அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

MRTS-ன் கீழ் இயங்கும் இரயில்வேயைச் சேர்ந்த EMU-க்கள் மற்றும் பராமரிப்பு உட்பட 2 ஆண்டுகள் வரை மெட்ரோ நிர்வாகம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 2 ஆண்டுகளுக்குப் பின், இவை மீண்டும் தெற்கு இரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும்.

தெற்கு ரயில்வே, முதல் 2 ஆண்டுகளுக்கு செயல்பாடுகள் மற்றும் சொத்து பராமரிப்புக்காக மெட்ரோ ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும். இந்த காலகட்டத்தில் பற்றாக்குறை ஏற்படின் மெட்ரோ நிர்வாகம் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
15 ஆண்டு கால காத்திருப்பு - விரைவில் வேளச்சேரி - பரங்கிமலை இரயில் சேவை தொடக்கம்..!
Metro - MRTS trains

தெற்கு இரயில்வே உள்கட்டமைப்பின் ஒருசில பகுதிகளை (கோட்டை மற்றும் சென்னை கடற்கரை) எதிர்காலத்தில் MRTS சேவைகள் பயன்படுத்த வேண்டும். அதற்கான வழிமுறைகளை தெற்கு ரயில்வே மற்றும் தமிழ்நாடு அரசு கூட்டுக் குழு முடிவு செய்யும்.

1997 அக்டோபர் மாதத்தில் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் இரயில் சேவையை MRTS தொடங்கியது. அதன்பிறகு இந்த சேவை வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் 2007 இல் முடிவடைந்தன.

தற்போது பறக்கும் இரயில் சேவையை மெட்ரோவுடன் இணைப்பதால், சென்னை மக்களுக்கு மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க முடியும். மெட்ரோ, புறநகர் இரயில் சேவை மற்றும் பேருந்து போக்குவரத்து ஆகியவற்றின் இணைப்பு, பொதுமக்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும்.

இதையும் படியுங்கள்:
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! இதைச் செய்தால் 20% தள்ளுபடி!
Metro - MRTS trains

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com