
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரி வரை மின்சார இரயில் சேவை இயங்கி வருகிறது. இதில் இந்த தாம்பரம் மற்றும் வேளச்சேரி வழித்தடத்தை இணைக்கும் விதமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே இரயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான இரயில் சேவை வருகின்ற நவம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. 15 ஆண்டுகளாக கிடப்பில் போட்ப்பட்ட இந்தத் திட்டம், விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பது இரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை வரை பறக்கும் இரயில் சேவை திட்டமிடப்பட்டது. இதனை 3 கட்டங்களாக முடிக்க தெற்கு இரயில்வே திட்டமிட்டது. இதன்படி சென்னை கடற்கரை முதல் மயிலாப்பூர் வரை முதல் கட்டமாக 1984 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 1995 இல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 2வது கட்டமாக மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை 1995 இல் பணிகள் தொடங்கப்பட்டு, 2004 இல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
3வது கட்டமாக வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான 5கி.மீ. வழித்தடத்தை அமைக்கும் பணி 2008இல் தொடங்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 4.5 கி.மீ. வரை மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டன. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் மீதமுள்ள 0.5கி.மீ. தொலைவிலான பணியை முடிக்க சமீபத்தில் தான் தெற்கு இரயில்வேக்கு அனுமதி கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால் சோதனை முயற்சிகள் முடிந்த பிறகு வருகின்ற நவம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு இரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி - பரங்கிமலை இரயில் தடம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், தாம்பரம் வழியாக கிளாம்பாக்கம் செல்ல பயணிகளுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் இரயில் பயணிகளின் பல ஆண்டு கனவும் நனவாகி விடும்.
இதுமட்டுமின்றி பறக்கும் இரயில் திட்டத்தை மெட்ரோ இரயிலுடன் இணைக்கும் திட்டத்திற்கும் இரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை மெட்ரோ இரயில் சேவை வருகின்ற 2028 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.