
இரயில் பயணத்தை பயணிகள் சிரமமின்றி எதிர்கொள்ளவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியன் இரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் முன்பதிவு டிக்கெட் முறையில் உடனுக்குடன் காலி டிக்கெட் நிலவரங்களை வழங்க இரயில்வே நிர்வாகம் ‘மேம்படுத்தப்பட்ட நடப்பு முன்பதிவு’ வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த வசதி தற்போது வந்தே பாரத் இரயில்களில் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது. வெகு விரைவில் மற்ற விரைவு இரயில்களிலும் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிவேகமான பயணத்தில் நேரத்தை மிச்சப்படுத்துவதால் வந்தே பாரத் இரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தெற்கு இரயில்வேயில் மட்டும் மொத்தம் 11 வந்தே பாரத் இரயில்கள் இயங்குகின்றன.
பொதுவாக இரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் வரை காலியிடங்கள் ஏதேனும் இருந்தால், அதில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி விரைவு இரயில்களில் உண்டு. இந்நிலையில் இந்த வசதியை மேலும் துரிதப்படுத்த 15 நிமிடங்களைக் குறைத்துள்ளது இரயில்வே நிர்வாகம். இதன்மூலம் இரயிலில் காலியாக உள்ள இடங்களின் விவரங்களை பயணிகளால் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
அதாவது இரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை காலியிடங்கள் இருந்தால் இனி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த வசதி தற்போது வந்தே பாரத் இரயில்களில் மட்டுமே கிடைக்கிறது.
மேம்படுத்தப்பட்ட நடப்பு முன்பதிவு வசதியை நடைமுறைக்கு கொண்டு வர கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தற்போது இந்தப் பணிகள் முடிவடைந்துள்ளதால், முதல் கட்டமாக வந்தே பாரத் விரைவு இரயில்களில் இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது.
புதிய முன்பதிவு வசதி குறித்து தெற்கு இரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “தெற்கு இரயில்வேயில் நாகர்கோவில் - எழும்பூர், எழும்பூர் - நாகர்கோவில், சென்னை - விஜயவாடா, மங்களூர் - திருவனந்தபுரம் மற்றும் கோவை - பெங்களூர் கண்டோன்மெண்ட் உள்ளிட்ட 8 வந்தே பாரத் இரயில்களில் மேம்படுத்தப்பட்ட நடப்பு முன்பதிவு வசதி அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வந்தே பாரத் இரயில்கள் ஒவ்வொரு இரயில் நிலையத்தில் இருந்தும் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை காலி இடங்களுக்கான டிக்கெட்டை பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் அல்லது நேரடியாக டிக்கெட் கவுண்டரிலும் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இரயில்கள் ஒவ்வொரு இரயில் நிலையத்திற்கும் வருவதற்கு முன்பே காலியிடங்கள் அப்டேட் செய்யப்படும் என்பதால், பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இந்த வசதி வந்தே பாரத் இரயில்களை அடுத்து, படிப்படியாக மற்ற விரைவு இரயில்களிலும் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.