வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தவர் சிவகுமார். இவர் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டுக்கு வேலைக்காக சில மாதங்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டார். இது சிறை விதிகளுக்கு முரண்பாடானது. இந்நிலையில் ராஜலட்சுமி வீட்டிலிருந்து நாலு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மாயமானது. இதனால் ஆத்திரமடைந்த டிஐஜி ராஜலட்சுமி, தன் வீட்டுக்கு வேலைக்காக வந்த ஆயுள் தண்டனை கைதி சிவகுமாரை சரமாரியாக தாக்கி, தன்னுடைய பதவி பிரயோகத்தை தவறாக பயன்படுத்தி தனக்கு கீழ் பணியாற்றும் மேலும் சிலரை கொண்டு ஆயுள் தண்டனை கைதி சிவகுமாரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து சிவகுமாரின் தாயாருக்கு தெரிய வர அவர் சென்னை சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தார். புகார் ஏற்றுக் கொண்ட சென்னை சிபிசிஐடி போலீசார் உடனடியாக, டிஐஜி ராஜலட்சுமி, சிறை எஸ்பி அப்துர் ரகுமான் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து, சிவக்குமாரை சேலம் மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்தனர்.
பின்னர் அங்கு சென்று இரு நாட்களுக்கு முன்னர் அவரிடம் மற்றும் சிறை கைதிகளிடம் விசாரணை நடத்தினர் தொடர்ந்து நேற்று வேலூர் மத்திய சிறையில் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் பல அதிரடி முடிவுகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இதன்படி ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்காக உபயோகப்படுத்திய வேலூர் சரக டிஐஜி ராஜலட்சுமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் வேலூர் மத்திய சிறை எஸ்பி அப்துர் ரகுமான், சென்னை புழல் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவருக்கு பதிலாக சென்னை புழல் சிறை எஸ்பி முருகேசன், வேலூர் சிறைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், சிறை கைதிகள் என்றாலே தவறு செய்தவர்கள். அதனால் நமக்கு அடிமை என்ற எண்ணம் சிறை போலீசார் மத்தியில் வேரூன்றி காணப்படுகிறது. இதனால்தான் ஆயுள் தண்டனை உட்பட பல்வேறு தண்டனை கைதிகளை, தங்கள் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இவர்களை சட்டத்துக்கு புறம்பாக தங்கள் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துவது குற்றம். ஆனால் குற்றம் என தெரிந்தும் அதை செய்யும் இது போன்ற அதிகாரிகளை காத்திருப்பார் பட்டியலுக்கு மட்டும் இல்லாமல் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் இனிமேலாவது குற்றம் செய்துவிட்டு தண்டனை அனுபவிக்கும் அனைவருக்கும் ஒரு உண்மையான விடுதலை கிடைத்தது போன்று நடவடிக்கையாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற தண்டனை கைதிகளை காண வரும் அவர் தம் குடும்பத்தார் பெண்களிடம், சில சிறைத்துறை போலீசார் தவறாக நடந்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது. அதாவது சிறையில் இருக்கும் உன் கணவரை நான் நன்கு கவனித்துக் கொள்கிறேன் என்கிற ரீதியாக வரும் பெண்களிடம் நட்பு ரீதியில் பேசி, அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் நிலையும் காணப்படுகிறது. இந்த ஒழுங்கீன செயல்களையும் சிபிசிஐடி போலீசார் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.