
மருத்துவ காரணங்களுக்காக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார். அந்த கடிதத்தில் ஜெகதிப் தன்கர் கூறியிருப்பதாவது;-
"உடல் நலத்தை முன்னிலைப்படுத்தவும், மருத்துவ காரணங்களுக்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது பதவிக் காலத்தில் இந்திய ஜனாதிபதி எனக்கு அளித்த உறுதியான ஆதரவிற்கு எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமருக்கும், மதிப்புமிக்க மந்திரிகள் குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றவை. மேலும் நான் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும் நான் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் அன்பு என்றும் என் நினைவுகளில் நிலைத்திருக்கும்.இந்த குறிப்பிடத்தக்க காலகட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அதிவேக வளர்ச்சியையும் நேரில் கண்டு, அதில் பங்கேற்றது எனது பாக்கியம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜக்தீப் தன்கர்?
ஜக்தீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுன் மாவட்டத்தில் உள்ள கிதான் என்ற கிராமத்தில் கடந்த 1951-ம் ஆண்டு, மே 18-ம் தேதி விவாசயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். தனது தொடக்கப் பள்ளி படிப்பினை சொந்த கிராமமான கிதானில் முடித்த தன்கர், உயர்நிலைப் பள்ளிப் படிப்பை சித்தோர்கரில் உள்ள சைனிக் பள்ளியில், முழு உதவித் தொகையில் முடித்தார்.பட்டப் படிப்பினை ராஜஸ்தானின் ஜெய்பூரில் கல்லூரியில் முடித்தார். அங்கு பிஎஸ்சி ஹானர்ஸ் உடன் இணைந்த இயற்பியல் பயின்றார்.
ஜக்தீப் தன்கரின் தனது அரசியல் பிரவேசத்தை ஜனதா தளம் கட்சியின் கரம் பற்றித் தொடங்கினார். கடந்த 1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது பிரதமர் சந்திரசேகர் ஆட்சியில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சராக சிலகாலம் பதவி வகித்தார்.
பின்பு, கடந்த 2008-ம் ஆண்டு ஜக்தீப் தன்கர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அப்போது, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா,‘நிர்வாகத்தில் முழுமையான திறன் பெற்ற முதல் தலைமுறை வழக்கறிஞர்’ என்று இவரை வர்ணித்திருந்தார். பிரதமர் மோடி, ‘தன்கருக்கு அரசியலமைப்பில் சிறந்த அறிவு உண்டு. மேலும், அவர் பேரவை விவகாரங்களில் நன்கு அறிந்தவர்’ என்று தெரிவித்திருந்தார். எனினும், கட்சிகளைக் கடந்து அனைத்து கட்சித் தலைவர்களிடமும் நல்ல உறவுகளைப் பேணுபவர்.
கடந்த 2019-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசுடன் முரண்பட்ட போக்குகளால் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தார்.
அப்போது முதலே, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.இந்தச் சூழ்நிலையில்தான் 2022-ல் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியின திரவுபதி முர்முவை நிறுத்தி வெற்றி பெற்றிருந்த பாஜக தலைமையிலான ‘என்டிஏ’ கூட்டணி, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு, அப்போதைய மேற்கு வங்க ஆளுநரான ஜக்தீப் தன்கரை நிறுத்தியது. அந்த முடிவை, பாஜகவின் உயர் முடிவுகளை எடுக்கும் பாஜகவின் ஆட்சி மன்றக் குழு எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, என்டிஏ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஜக்தீப் தன்கர் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடந்து நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளே பெற்றிருந்தார்.