கொலை முதல் வங்கி மோசடி வரை... சிபிஐ எப்போது ஒரு வழக்கை கையில் எடுக்கும்?

Vijay CBI Investigation
Vijay CBI Investigation
Published on

இந்தியாவில் ஒரு பெரிய அரசியல் பிரமுகரோ, தொழிலதிபரோ அல்லது மர்மமான முறையில் ஒரு சாமானியரோ இறந்துவிட்டால், மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வைக்கும் முதல் கோரிக்கை, "இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்" என்பதுதான். உள்ளூர் காவல்துறையின் மீது நம்பிக்கை குறையும்போதோ அல்லது வழக்கில் அரசியல் தலையீடு இருக்கும் என்று அஞ்சும்போதோ, அனைவரின் பார்வையும் சிபிஐ (Central Bureau of Investigation) பக்கம் திரும்புகிறது. ஆனால், நினைத்த மாத்திரத்தில் சிபிஐ வந்து விசாரித்துவிட முடியாது. 

காவல்துறை Vs சிபிஐ!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை என்பது 'மாநிலப் பட்டியலில்' வருகிறது. அதாவது, ஒரு மாநிலத்தில் நடக்கும் குற்றத்தை விசாரிக்கும் முழு அதிகாரமும் அந்த மாநிலக் காவல்துறைக்குத் தான் உண்டு. சிபிஐ என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அமைப்பு. எனவே, ஒரு மாநிலத்தில் நடந்த குற்றத்தை விசாரிக்க சிபிஐ தானாக முன்வந்து உள்ளே நுழைய முடியாது. அதற்குச் சில சட்டப்பூர்வமான வழிமுறைகள் உள்ளன.

1. மாநில அரசின் பரிந்துரை: ஒரு மாநிலத்தில் நடந்த குற்றத்தை உள்ளூர் போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று அந்த மாநில அரசு கருதினாலோ, அல்லது அந்த வழக்கு மிகவும் சிக்கலானது என்று உணர்ந்தாலோ, மாநில அரசே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதலாம். "எங்கள் மாநிலத்தில் நடந்த இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்று மாநில உள்துறை அமைச்சகம் பரிந்துரைக்கும். இதை மத்திய பணியாளர் நலத்துறை ஏற்றுக்கொண்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்.

2. நீதிமன்றத்தின் உத்தரவு: பல நேரங்களில் மாநில அரசு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க மறுக்கலாம். அந்தச் சமயத்தில், பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ அணுகலாம். வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், உள்ளூர் போலீஸ் விசாரணையில் திருப்தி அடையவில்லை என்றால், மாநில அரசின் அனுமதியைக் கேட்காமலேயே வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட முடியும். இதுதான் சிபிஐக்கு இருக்கும் மிகப்பெரிய சாளரம்.

3. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்: மத்திய அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள், வங்கி மோசடிகள் அல்லது டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களில் நடக்கும் குற்றங்களை விசாரிக்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை. சிபிஐ தானாகவே முன்வந்துவழக்குப் பதிவு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
காகம் கரைந்தால் நிஜமாகவே விருந்தினர் வருவார்களா? உண்மை மற்றும் நம்பிக்கை!
Vijay CBI Investigation

எந்த வகையான குற்றங்களை சிபிஐ விசாரிக்கும்? 

எல்லா வழக்குகளையும் சிபிஐ விசாரிக்காது. முக்கியமாக மூன்று வகையான பிரிவுகளில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல்.

  • வங்கி மோசடிகள், அந்நியச் செலாவணி மோசடிகள், கள்ள நோட்டுப் புழக்கம் மற்றும் சைபர் குற்றங்கள்.

  • தீவிரவாதம், திட்டமிட்டக் கொலைகள், கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களின் நடவடிக்கைகள்.

பொது ஒப்புதல் என்றால் என்ன? 

சிபிஐ ஒரு மாநிலத்தில் நுழைய அந்த மாநில அரசு 'பொது ஒப்புதல்' அளித்திருக்க வேண்டும். சில மாநிலங்கள் அரசியல் காரணங்களுக்காக இந்த அனுமதியைத் திரும்பப் பெறுவதுண்டு. அப்படி அனுமதி மறுக்கப்பட்டால், ஒவ்வொரு முறை அந்த மாநிலத்திற்குள் ரெய்டு அல்லது விசாரணைக்குச் செல்லும்போதும் சிபிஐ மாநில அரசின் அனுமதியைக் கேட்க வேண்டும். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்ட வழக்குகளுக்கு இந்தத் தடை பொருந்தாது.

இதையும் படியுங்கள்:
துள்ளித் குதிக்கும் "ஜம்பிங் ஜீன்கள்" - விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை!
Vijay CBI Investigation

சிபிஐ 'டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் - 1946'ன் படி இது செயல்படுகிறது. உள்ளூர் போலீஸ் திணறும் வழக்குகளில் துப்பறிந்து உண்மையைக் கொண்டுவருவதில் சிபிஐக்கு நிகர் சிபிஐ தான். ஆனால், இந்த அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. நீதியின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் சிபிஐ, அரசியல் தலையீடுகள் இன்றிச் செயல்பட்டால் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com