

தமிழக அரசியல் களத்தில் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், மிகவும் கவனிக்கத்தக்க நபராக பார்க்கப்பட்டு வருகிறார். நேற்று முன்தினம் (ஜனவரி 22) தமிழக வெற்றிக் கழகம் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
ஏற்கனவே தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விசில் சின்னமே கோரப்பட்டிருந்த நிலையில், எதிர்பார்தத படி அந்த சின்னமே கிடைத்தது, தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய், தனது எக்ஸ் தளப் பக்கத்தின் கவர் போட்டோவை விசில் சின்னமாக மாற்றியிருக்கிறார். இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்னும் சில நாட்களில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ள நிலையில், தவெக தனித்து போட்டியிடும் மனப்பான்மையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தவெக தலைமையில் கூட்டணியை அமைக்க அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கான பலன் இன்னும் கிடைக்கவில்லை.
தற்போது பெரும்பாலான கட்சிகள் கூட்டணியில் இணைந்து விட்டன. இந்நிலையில் தேமுதிக, ஓபிஎஸ் தரப்பினர் மற்றும் பாமக (ராமதாஸ்) ஆகியோர் மட்டுமே இன்னும் கூட்டணியில் சேராமல் உள்ளனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைய விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தேமுதிக மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் இன்னும் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்காத நிலையில், அவர்களை தவெக கூட்டனில் இணைக்க செங்கோட்டையன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
கரூர் சிபிஐ வழக்கு மற்றும் ஜனநாயகன் பட விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் சோர்ந்து போயிருந்த விஜய்க்கு, விசில் சின்னம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
நாளை (ஜனவரி 25) பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்த நிலைப்பாடுகளை தலைவர் விஜய் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது எக்ஸ் தலை பக்கத்தில் கவர் போட்டோவில் விசில் சின்னத்தை வைத்துள்ளார் விஜய்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக 234 தொகுதிகளில் விசில் சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள நிலையில், தற்போது தங்களது சின்னத்தை பொதுமக்கள் மத்தியில் பரப்பும் வகையில், கவர் போட்டாவாக விசிலை வைத்துள்ளார் விஜய். இது தவிர தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் விசில் சின்னத்தை பொதுமக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
நாளை நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் விசில் சின்னத்தை தமிழக மக்கள் மத்தியில் பரப்புவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் பொது சின்னமாக வழங்கப்பட்டுள்ள விசில் சின்னத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள தவெக தலைமை தீவிர பிரச்சாரத்தில் இறங்கவுள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குப்பதிவை தவெக பெற்றால் விசில் சின்னம் நிரந்தரமாக கிடைக்கும் என்பதால், பொதுமக்களின் பேராதரவை தவெக பெற முயற்சிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.