

ஐந்து மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துவிட்டன. அதைத் தொடர்ந்து எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் நிறைய வெளியாகி வருகின்றன. ஒருபுறம் ஒரு சில கருத்துக்கணிப்புகள் திமுக ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரிவித்துள்ளன. வேறு
சில கருத்துக்கணிப்புகள் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிப்புகள் வெளியிட்டுள்ளன.
வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில், திமுகவுக்கு சாதகமான கணிப்புகள் கூட அவர்கள் 120 தொகுதியிலிருந்து 140 தொகுதிகள் வரையே அதிகபட்சம் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளனர். இதே போல் தான் அதிமுக கூட்டணிக்கு சாதகமான கருத்துக்கணிப்புகளும் 120 லிருந்து 140 தொகுதிகளுக்குள் தான் அவர்களின் வெற்றி வாய்ப்பு அமையும் என்று வெளியிட்டுள்ளன.
இந்த கணக்கின்படி அதிமுக மற்றும் திமுக கட்சிகள் ஒரு வேளை தேர்தலில் வெற்றி பெற்றால் கூட, அவர்கள் தனி மெஜாரிட்டி ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரிகிறது. ஒருவேளை முக்கிய கட்சிகள் 110 தொகுதிகளில் அருகிலேயே, அவர்களின் மொத்த கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றால், ஆட்சி அமைப்பதற்கு கட்டாயம் தவெகவின் தயவு தேவைப்படும்.
அதிமுக அல்லது திமுக கூட்டணி ஆட்சியை அமைக்க பெரும்பாலும் விஜயின் தயவு தேவைப்படும் சூழல் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் 1 சட்டமன்ற உறுப்பினர் பதவி கூட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். இப்படியான நெருக்கடி மிகுந்த சூழலில் எம்எல்ஏக்களின் விலை மிகக் கடுமையாக இருக்கும். ஆட்சி அமைப்பதற்காக பெரிய அளவில் குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளது.
இது போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு விஜய் தனது கட்சி வேட்பாளர்களை அனைவரையும் இன்று ஆலோசனைக் கூட்டத்திற்கு பனையூர் அழைத்திருந்தார். ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெறும் முன்னரே, எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் தலைமறைவான நிலையில் விஜய் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்.
இன்று மாலையில் தவெக தலைமையகமான பனையூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் , வாக்குப்பதிவு அன்று தேர்தல் அலுவலர்கள் வழங்கிய 17சி சான்றிதழுடன் அனைவரும் வந்திருந்தனர். ஒவ்வொரு தொகுதிகளிலும் தவெகவின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்று ஆலோசிக்கப்பட்டது
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவரான விஜய் , "வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நாளன்று நமது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான செயல்கள் அங்கு நடைபெற்றால் உடனடியாக தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்க வேண்டும். இறுதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை முகவர்களும் வேட்பாளர்களும் வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டும். வெற்றி சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு வேறு எங்கும் செல்லாமல், உடனடியாக பனையூர் அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும். உங்களின் வருகைக்காக நான் இங்கு காத்திருப்பேன். இரவு நேரமாக இருந்தாலும் நான் இங்கேதான் உங்களுக்காக இருப்பேன் என்பதை மறந்து விடாதீர்கள்". என்று எச்சரிக்கையுடன் விஜய் தனது கட்சி வேட்பாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.