

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் துவங்கியது முதல் எண்ணற்ற அரசியல் திருப்பங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அரசியல் களம் வந்த இரண்டே ஆண்டுகளில் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் பெற்ற திராவிடக் கட்சிகளை பின்தள்ளி விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்று ஆச்சரியம் தந்தது.
சாமி வரம் தந்தாலும் பூசாரி அனுமதித்தால் தான் இறைவனைப் பார்க்க முடியும் என்ற சொலவடை உண்டு. அதே ரீதியில் விஜய் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது தற்போது வெற்றி பெற்ற பிற கட்சிகள் எடுக்கும் முடிவுகளில் உள்ளது.
தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 118 எனப்படும் மேஜிக் எண்ணிக்கை கொண்ட இடங்கள் தேவை எனும் பட்சத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தற்போது தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. தவெக 108 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உருவாகி விட்டாலும் முதல்வர் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி அமைக்க கூடுதலாக இன்னும் 10 இடங்கள் இருந்தால் தான் 118 என்ற இடங்களுடன் தகுதி பெறும்.
இதனால் மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோருவதற்கு தவெக ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதன்படி தவெக தலைமையில் ஆதரவு தரும் பிற கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆட்சி அமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரம் அவகாசம் வேண்டுமென தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் தவெக சார்பில் இமெயில் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவகாசம் முடிவதற்குள் மற்ற கட்சிகளுடன் ஆதரவு கோருவதற்கு தவெக முயன்று வருவதாகவும் சம்மதம் தெரிவிக்கும் விதமாக பிற கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தரலாம் அல்லது வேண்டாம் என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. யார் யார் புதிய முதல்வர் அணியில் இணைந்து ஆதரவுக் கரம் நீட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகத் சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆலோசனை நடைபெற்றதாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சியின் தேசிய தலைமைக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து காங்கிரஸ் தலைமை விஜய்க்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை மட்டுமே விஜய் பெற வேண்டும் எனவும், பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறக் கூடாது எனவும் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு நிபந்தனை விதித்துள்ளதாகவும் தெரிகிறது.
தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் நுழைந்து விடுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெக விற்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அரசியல் விவகார குழு நேற்று இரவு எடுத்த முடிவை பொதுச் செயலாளர் இன்று அறிவிப்பார் என காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ள காங்கிரஸ்ன் ஒரு சாரார் ஏற்கனவே தவெக.வுடன் கூட்டணி அமைக்க விரும்பினர் என்பதால் ஆட்சி அமைக்க காங்கிரசிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் நிச்சயம் ஆதரவு கிடைக்கும் என கருதப்படுகிறது.
பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று விரைவில் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சியில் அமர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.