

விண்வெளிப் பயணங்களின் போது ஈர்ப்பு விசை இல்லாத (Microgravity) காரணத்தால், விண்வெளி வீரர்களின் எலும்பு அடர்த்தி மற்றும் தசை வலிமை மிக வேகமாக குறையும். இதனைத் தவிர்க்க அவர்கள் தினந்தோறும் சுமார் 2 மணி நேரம் கடின உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இனி இதற்கு அவசியமில்லை என்பது போல், ஒரு புதிய இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது இங்கிலாந்தின் ஸ்டார்ட் அப் நிறுவனம்.
விண்வெளி வீரர்களின் உடல்நலனைப் பாதுகாப்பதில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை இந்த இயந்திரம் ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் Physical Mind London என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், High Frequency Impulse for Microgravity (HIFIm) என்ற புதிய ‘Zero-Gravity Gym’ இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இயந்திரம் தான் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது. விண்வெளி வீரர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், இனிவரும் காலங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளிப் பயணங்களின் போதே வீரர்கள் Zero-Gravity Gym-ஐ பயன்படுத்தி உடற்பயிற்சிகளை எளிதாகவும், வேகமாகவும் செய்ய முடியும். இங்கிலாந்து ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சியைக் கண்டு இணையவாசிகள் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
பொதுவாக விண்வெளிக்கு வீரர்கள் செல்லும்போது, அவர்களின் பாதுகாப்பு ஒன்றே முக்கியமாக கருதப்படும். தற்போது விண்வெளி வீரர்களின் உடல் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது, பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
Zero-Gravity Gym இயந்திரத்தின் சிறப்பம்சங்கள்:
*குறைந்த நேர பயிற்சி:
விண்வெளி வீரர்கள் தற்போது மேற்கொண்டு 2 மணிநேர உடற்பயிற்சியை, வெறும் 20 முதல் 30 நிமிடங்களாக இந்த இயந்திரம் குறைத்து விடும்.
*விண்வெளியில் குதிக்க பயிற்சி:
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால், வீரர்களால் சாதாரணமாக குதிக்க முடியாது. ஆனால், இந்தப் புதிய இயந்திரத்தைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் எடையற்ற நிலையில் குதிக்கும் (Jumping) பயிற்சியை செய்யலாம்.
பாதுகாப்பு:
* Zero-Gravity Gym இயந்திரத்தில் உள்ள அதிநவீன ஸ்பிரிங் (Spring) போன்ற அமைப்பு, வீரர்கள் குதிக்கும் போது ஏற்படும் அதிர்வுகளால் விண்கலம் பாதிக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாமல் இயங்கும்:
* Zero-Gravity Gym இயந்திரம் இயங்குவதற்கு மின்சாரம் தேவையில்லை என்பது, விண்வெளிப் பயணங்களில் மிகப்பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது.
Zero-Gravity Gym, எதிர்கால விண்வெளி சுற்றுலாவிற்கு (Space Tourism) மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, மிகக் குறைந்த நேரத்திலேயே அதிக பலனைக் கொடுக்கும் இதன் செயல்பாடு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) மற்றும் ஏர்பஸ் (Airbus) போன்ற முன்னணி நிறுவனங்கள், பிரிட்டிஷ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது