

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் திரையில் தங்கள் நாயகனைப் பார்க்கும்போது, அவர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கும் வகையில் அதிரும். அவர்கள் தான் 'மக்கள் திலகத்தைப்' 'புரட்சித் தலைவராக்கி' முதலமைச்சர் ஆக்கினார்கள். எம்.ஜி.ஆர். ஆரம்பகாலத்திலிருந்தே பெண்கள் வாக்குகளை ஈர்க்கும் வகையில் நடித்து வந்ததால், அவருக்கு எதிராகப் பரப்பப்பட்ட எந்தக் கருத்துகளும் மக்களிடம் எடுபடாமல் போயின.
1970-களில் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த 'மாணவன்' திரைப்படத்தில் இடம்பெற்ற, 'விசிலடிச்சான் குஞ்சுகளா.. குஞ்சுகளா... வெம்பிப் பழுத்த பிஞ்சுகளா... பிஞ்சுகளா' என்ற பாடல் அப்போது மிகவும் பிரபலம். கமல்ஹாசன் அந்தப் பாடலில் நடனமாடியிருப்பார். ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ என்ற வார்த்தை அன்றைய காலகட்டத்தில் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது. மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் மட்டுமே அவ்வாறு அழைக்கப்பட்டனர். 80-களுக்குப் பிறகு அந்த வார்த்தை வழக்கொழிந்து போனது.
தற்போது மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். அவருக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதை நம்பிக் கட்சி தொடங்கிவிட்டார். தேர்தல் ஆணையம் விஜய் கட்சிக்கு 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அந்தக் கட்சியினர் உடனே பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் விசில்களைக் கொடுத்துத் தங்கள் சின்னத்தை விளம்பரப்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
'விசில் போடுவோம்' என்ற அறிவிப்பை விஜய் வெளியிட்டுவிட்டார். இனி எல்லா இடங்களிலும் விசிலைப் பார்க்கலாம், விசில் சத்தத்தைக் கேட்கலாம். இதனால் மீண்டும் 'விசிலடிச்சான் குஞ்சுகள்' என்ற வார்த்தை புழக்கத்திற்கு வரலாம்.
ஆனால் பழைய 'விசிலடிச்சான் குஞ்சுகள்' வேறு, புதியவர்கள் வேறு. ஒரு கட்சியிலிருந்து அதன் வெற்றிக்காக உழைத்து, பாடல்கள் மூலம் சின்னத்தைக் கொண்டு வந்து, எம்.எல்.ஏ. ஆகித் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டவர் எம்.ஜி.ஆர். மக்கள் அவரைத் தங்கள் வாத்தியாராகப் பார்த்தனர். 'வாங்கய்யா வாத்தியாரய்யா' என்று அவர் படத்தில் பாடல் இடம்பெற்றபோது அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர் மறைந்தும் மறையாத புகழோடு மக்கள் மனங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார்.
‘விசிலடிச்சான் குஞ்சுகளா’ பாடலில் அடுத்த வரியாக 'வெம்பிப் பழுத்த பிஞ்சுகளா.. பிஞ்சுகளா’ என்று வரும். இது அவர்களைக் கிண்டல் செய்வது போல இருக்கும். இது தெரியாமல் இதனை வைரலாக்க நினைத்தால், அது வைரஸாக மாறி எதிர்வினையாற்றவும் வாய்ப்புள்ளது.