

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஜுரம் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் , NDTV சேனலுக்கு நேற்று பேட்டியளித்துள்ளார். தேர்தல் நேர கூட்டணிகளை திமுக , அதிமுக இறுதி செய்த நிலையில் , தவெகவின் நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.
சென்னையில் நடந்து வரும் NDTV யின் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துக் கொண்டு , தங்கள் அரசியல் கருத்துகளை , அரசியல் நிலைப்பாடுகளை குறித்து பேசி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு NDTV சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி செய்தியாளர் குழுவினை சந்தித்த விஜய் சுமார் 1 மணி நேரம் பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.
விஜயின் பேட்டியில் அவரது அரசியல் , எதிர்காலத் திட்டங்கள், நிலைப்பாடு , அவரது அரசியல் முன்மாதிரி பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரு நேர்காணல் முழுவதும் கேமரா மூலம் பதிவு செய்யப்படாமல் , அவர் கூறிய விஷயங்களை கேட்டு செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் குறித்து ?
அதற்கு பதிலளித்த விஜய் , இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறும் என்று தான் துளியும் எதிர்பார்க்கவில்லை, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. தனக்கு அந்த சம்பவம் மிகப்பெரிய வேதனையை அளிப்பதாகவும் , அந்த வேதனை தன்னை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு பிடித்த சினிமா நடிகர் யார்?
சினிமாவை பொருத்தவரையில் தான் ஷாருக்கானின் ரசிகன் என்று விஜய் கூறியுள்ளார்.
விஜயிடம் நீங்கள் கிங் மேக்கரா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
நான் ஏன் கிங்மேக்கர் ஆக இருக்க வேண்டும் என்று அரசியலுக்கு வரவில்லை. நான் வெற்றி பெறுவதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். நான் அரசியலில் போராடி வெற்றி பெறுவேன் , எனக்கு வரும் கூட்டங்களை எல்லாம் பார்த்துள்ளீர்களா? எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் எனது ரோல் மாடல்கள். நான் திட்டமிட்டே சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ளேன் ,
இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் முன்பே எனக்கு இருந்தது. கொரோனா காலகட்டத்தில் இருந்தே இது குறித்து யோசித்தேன். நான் இதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. ஒரு நீண்ட பயணத்திற்காகதான் நான் இங்கே இருக்கிறேன். எனது கவலை எல்லாம் முழுக்க மக்களின் பிரச்சினைகள் மீதுதான் உள்ளது. மேலும் விஜய் தங்களுக்கு தேர்தல் சின்னமாக விசிலை அறிவித்தது. தங்களின் முதல் வெற்றி என்றும் தேர்தல் வெற்றிக்கான "தெய்வீக முன்னுரை" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஜனநாயகன் திரைப்படம் பற்றி?
எனது அரசியல் நுழைவு காரணமாக ஜனநாயகன் திரைப்படம் பாதிக்கப்பட்டுள்ளதால், உண்மையில் எனக்கு வருத்தமாக உள்ளது. படத்தின் தயாரிப்பாளருக்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால், இது நான் முன்பே எதிர்பார்த்ததுதான். அதற்காக நான் மனதளவில் தயாராகவும் இருந்தேன் என கூறியுள்ளார்.
ஊடகங்களை சந்தித்து பேசாதது? குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தேசிய ஊடகத்துடன் இதுதான் எனது முதல் நேர்காணல். நான் ஊடகங்களில் பேச மறுக்கிறேன் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் ,நேரம் வரும்போது நிச்சயம் அனைத்து ஊடகங்களையும் சந்தித்து பேசுவேன் என்று கூறியிருந்தார். இவ்வாறு விஜய் கேள்விகளுக்கு பதிலளித்து இருந்ததாக NDTV யை சேர்ந்த ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.