

உலகில் பல்வேறு பகுதிகளில் பல அதிசய மற்றும் அமானுஷ்ய நிகழ்வுகளும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இப்படி ஏற்படும் அதிசய நிகழ்வை சிலர் இறைவனின் படைப்பு, அமானுஷ்யம் என்றும் ஒருசிலர் இது அறிவியல் நிகழ்வு என்று கூறுகின்றனர். அந்த வகையில் இந்தோனேசியாவில் சமீபத்தில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்து அனைவரையும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள லிமாபுலு கோட்டா ரீஜென்சி என்ற சிறிய கிராமத்தில் இயற்கை ஒரு விசித்திரமான விளையாட்டை விளையாடி இருக்கிறது. அங்குள்ள விவசாயி ஒருவரின் நிலம் ஒன்று திடீரென உள்வாங்கி கிணறு வடிவில் பெரிய பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி உடனே இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அங்கு விரைந்து சென்று அந்த பள்ளத்தில் ஊறிய நீரை கண்ட பொதுமக்கள் அது மருத்துவ நீர், கடவுள் உருவாக்கியது என நம்பத்தொடங்கினர்.
மேலும் இது இறைவனால் வழங்கப்பட்ட அதிசய தீர்த்தம் என்றும் தீராத நோய்களை தீர்க்கும் மருத்துவ நீர் என்றும் கருதினர். இந்த புனித நீரை பருகினால் உடலில் உள்ள நோய் மற்றும் நம் வாழ்வில் நன்மை உண்டாகும் என்று நம்பியுள்ளனர். பின்னர் அந்த பள்ளத்தில் உள்ள தண்ணீரை எடுத்துக் குடித்து உள்ளனர்.
இந்த செய்தி காட்டுத்தீயை போல் பரவ மக்கள் சாரைசாரையாக படையெடுத்து வந்து அந்த நீரை பாட்டில்களிலும், குடுவைகளில் நிரப்பிக்கொண்டு செல்லத்தொடங்கினர். இந்த செய்தியும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நீர் எடுத்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
இதனிடையே இந்தக் தகவல் குறித்து கேள்விப்பட்ட அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் திடீரென தோறிய பள்ளத்தில் இருந்த நீரை எடுத்து சென்று ஆய்வு நடத்தினர்.
ஆனால் இந்த நீரை விஞ்ஞானிகள் ஆய்வகங்களில் ஆய்வு செய்த போது தான் அந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் தெரிய வந்ததுள்ளது. அந்த நீரில் இ-கோலி எனப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த பாக்டீரியாக்கள் அதிகளவு இருப்பது கண்டறிப்பட்டது.
இதனையடுத்து மேற்கு சுமத்ராவின் துணை ஆளுநர் வாஸ்கோ ரூசிமி கூறுகையில், புதிதாக உருவான பள்ளத்தில் தேங்கி இருக்கும் நீரில் இ-கோலி பாக்டீரியா அதிகளவு உள்ளது. இந்த இ-கோலி என்ற நச்சுத்தன்மை வாய்ந்த பாக்டீரியா குடல் நோய்களை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அந்த நீரை குடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனமழையால் தூண்டப்பட்ட நிலச்சரிவு காரணமாகவும், மண் அரிப்பு, நில அமைப்பு பலவீனம் போன்றவை இத்தகைய பள்ளம் உருவாகியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் பள்ளத்தில் உள்ள நீர் கண்ணுக்கு தெளிவாக இருக்கும் என்றாலும் குடிப்பதற்கு முழுமையாக ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காரணம், அது சுற்றியுள்ள நிலத்திலிருந்து பாக்டீரியா மற்றும் விலங்கு கழிவு போன்றவற்றை இழுக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது என்பதால் அது பொது சுகாதாரத்துக்கு அபாயத்தை உருவாக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.