விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு பிரபலமான இந்து பண்டிகையாகும். மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கணேஷ் பண்டிகை என்று அழைக்கப்படும் இந்த விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை ஒரே மாதிரியாகவும், ஒத்த அர்த்தங்களைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும் சடங்குகள் மற்றும் மரபுகளில் சிறிய வேறுபாடுகள் உள்ளது. அந்த வகையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு மாநிலங்களிலும் தற்காலிகமாக பெரியளவில் விநாயகர் சிலையை நிறுவி மூன்று முதல் 10 நாட்கள் வரை வழிபாடுகள் செய்த பின்னர், அதை நீர்நிலைகளில் கரைப்பது காலம்காலமாக நடந்து வரும் வழக்கமாகும்.
அதேபோல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி, இந்து மகாசபா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இதேபோல் வீடுகளிலும் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்ட பின்னர் நீர்நிலைகளில் கரைத்து விடுவர்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில் இந்தாண்டும் அதேபோல் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது சுற்றுச்சூழல் மாசுபடாமலும், நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையிலும், சிலைகளை கரைப்பதற்கு மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் அதை காணலாம். அதன்படி,
செய்ய வேண்டியவை...
* சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
* விநாயகர் சதுர்த்திக்கு வைக்கும் சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மக்கக்கூடிய இயற்கையாக மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள்.
* சுற்றுசூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தப்பட வேண்டும்.
* விநாயகர் சிலைகளை அலங்கரிக்க ஆபரணங்களை வடிவமைக்க, உலர்ந்த மலர் மற்றும் வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
* அனைத்து குப்பைகளையும் ஒன்றாக போடாமல் பொறுப்புடன் குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து அப்புறப்படுத்துங்கள்.
* பிரசாதங்கள் வழங்குவதற்கு விரைவில் மக்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தவும்.
* மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே, மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி சிலைகளை கரைக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை
* விநாயகர் சிலைகளை செய்ய பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) பொருட்களை பயன்படுத்த கூடாது.
* சிலைகளுக்கு வர்ணம் பூச, நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம், எனாமல் மற்றும் செயற்கை சாயங்கள், மக்கும் தன்மையற்ற இரசாயனசாயங்களை உபயோகிக்கக் கூடாது என்றும் அதற்குப் பதிலாக, மக்கக்கூடிய, நச்சு கலக்காத இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தி விட்டு தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது.
* விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள் மற்றும் ஸ்ட்ரா(Straw) போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அனுமதி இல்லாத நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது.
* பூஜைக்கு பயன்படுத்திய பூக்கள், பிரசாதம் பயன்படுத்திய குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கண்ட இடங்களில் கொட்டக் கூடாது.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.