

விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் போன்ற நைவேத்யங்களை படைத்து பூஜை செய்கின்றனர்.
இதேபோல் கோவில்கள் சார்பிலும், பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. தலைநகர் சென்னையில் மட்டும் 1,562 சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியிருக்கிறது.
சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அவ்வப்போது ரோந்து சென்று கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், தலா 2 தன்னார்வலர்களை பாதுகாவலர்களாக நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழா காலத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர்.
மேலும் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாடுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பொது இடங்களில் உரிய அனுமதியுடன் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு, காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழிபாடு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழிபாடு முடிந்த பின்னர், காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்ல வேண்டும். அதன்படி, வருகிற 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலம் நடத்தி, காவல்துறையால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.உரிய அனுமதி பெறாமல் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி இல்லை. மேலும், காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை மீறுபவர்கள் மீதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
கோவை புலியகுளத்தில் சந்தன காப்பு 'ராஜஅலங்காரம்':
கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு யாகங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை மற்றும் இனிப்புகள் படைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஆசிய கண்டத்திலேயே மிகப்பரிய ஒற்றைக்கல் சிலையான இந்த முந்தி விநாயகர், 190 டன் எடையும், 19 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இச்சிலைக்கு 50 கிலோ சந்தனத்தால் காப்பிடப்பட்டு, 2 டன் மலர்களால் பிரம்மாண்ட சந்தன காப்பு 'ராஜஅலங்காரம்' செய்யப்பட்டது. மேலும், விநாயகருக்கு அணிவிக்கப்பட்டிருந்த மயில் தோகை மாலை பக்தர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் 5 டன் பூக்களால் அலங்காரம்:
இதேபோல, திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயிலிலும் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இங்குள்ள ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கோயில் வளாகம் முழுவதிலும் மற்றும் 32 அடி உயர விநாயகர் சிலையைச் சுற்றிலும் சுமார் 5 டன் வண்ணப் பூக்களைக் கொண்டு கண்ணைக் கவரும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. மேலும், வளாகத்தில் உள்ள 108 விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்ததோடு, பிரம்மாண்ட பூ அலங்காரத்தின் முன் புகைப்படங்களும் செல்ஃபிகளும் எடுத்து மகிழ்ந்தனர்.
அதே போல் சென்னையின் கொருக்குப்பேட்டை பகுதியில் முதலமைச்சர் விஜயை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.
கொருக்குப்பேட்டையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகள், விஜயின் சமீபத்திய திரைப்படத் தோற்றங்கள் மற்றும் அவரது அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் கோவில் கருவறை முழுவதும் ரூ.10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.