

விநாயகர் சதுர்த்தி திருநாளைக் கொண்டாடுவதற்கு தமிழ்நாட்டில் பல வரலாற்று சிறப்புமிக்க மற்றும் புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள் உள்ளன. இத்திருநாளில் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பிரம்மாண்ட அலங்காரங்கள் மற்றும் வழிபாடுகள் மிக சிறப்பாக நடைபெறும்.
கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலை ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையாகக் கருதப்படுகிறது. ஊத்துக்குளியில் உள்ள ஒரு பெரிய கிரானைட் பாறையில் இருந்து இந்த சிலை செய்யப்பட்டது. 19 அடி 10 அங்குல உயரமும், 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடையும் கொண்ட, ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட விநாயகருக்கு சதுர்த்தி அன்று டன் கணக்கில் மலர்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
விநாயகப் பெருமான் தாமரை மலர் மீது அமர்ந்த கோலத்தில், தன் துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
நான்கு திருகரங்களில் வலது முன்கரத்தில் தந்தமும், பின்கரத்தில் அங்குசமும், இடது முன்கரத்தில் பலாப்பழமும், பின்கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். இவருடைய கிரீடத்திலும் தாமரை மேல் நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிகவும் அழகாக காணப்படுகிறது.
விநாயகரின் நெற்றி மட்டுமே 2 அடி அகலம் கொண்டது. இவரது இடது பாதத்தில் 'மகாபத்மம்' என்னும் அபூர்வ ரேகை உள்ளது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது. திறமையான சிற்பிகள் 21 பேர் சேர்ந்து 6 ஆண்டுகள் உழைத்து இந்தச் சிலையை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான விநாயகர் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
விநாயகப் பெருமானின் கம்பீரமான தரிசனத்தைக் காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது என்பது போல் அலங்காரங்கள் மிகவும் சிறப்பாக செய்யப்படுகின்றன.
வாசுகி பாம்பை தன்னுடைய வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால் நாக தோஷத்தை போக்குவராக காணப்படுகிறார். இவரை வணங்குபவர்களுக்கு நாகதோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
விநாயகரை வழிபட வினைகள் தீரும். இவரை எளிமையாக மனம் உருகி அழைத்தாலே வந்து காத்திடுவார். அதனால் தான் வேழமுகத்து விநாயகரை தெருவுக்குத் தெரு பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபடுகின்றனர். எத்தகைய சிக்கல்கள் நேரிடினும் இவர் முந்தி வந்து காப்பவர் என்பதால் இவரை 'முந்தி விநாயகர்' என்று அழைக்கிறார்கள்.
15 நாட்களுக்கு ஒருமுறை வரும் சங்கடஹர சதுர்த்தி கோவிலில் முறையாக கடைபிடிக்கப்படுகிறது. சித்திரை முதல் நாள் மலர்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. சுமார் 5 டன் எடையுள்ள மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.
அதேபோல் விநாயகர் சதுர்த்தி நாளில் இந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப் படுவதுடன், 3 டன் பூக்களால் தொடுக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான மாலை அணிவிக்கப்பட்டு விநாயகர் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.
இவரை வணங்க சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பதினாறு வகை பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்றும், இந்த விநாயகர் சன்னதியில் பிள்ளைகளுக்கு அட்சராப்யாசம் செய்து படிப்பினைத் தொடங்க நல்ல முறையில் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். புதியதாக வாகனங்கள் வாங்குபவர்கள் இக்கோவிலுக்கு வந்து வாகன பூஜை செய்வதை மிகவும் விசேஷமாகக் கருதுகின்றனர்.
கோவில் தினமும் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எங்குள்ளது?
கோயம்புத்தூர் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் புலியகுளம் பிரதான சாலையில் இக்கோவில் அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் மக்களும் எளிதில் தரிசிக்கும் வகையில் பெரிய திருவுருவில் விநாயகர் காட்சி தருகிறார்.
வாசகர்கள் கோயம்புத்தூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க முந்தி விநாயகரின் பிரம்மாண்டத்தை உணர்ந்து, அவரது அருளால் சகல ஐஸ்வர்யங்களையும் தடைகளற்ற வெற்றியையும் பெற்று வளமான வாழ்வை அடைவதற்கான ஆன்மீக வழிகாட்டுதலைப் பெறுகின்றனர்.