

இந்தியாவில் ஹெல்மெட் அணியாதவர்கள், அதிவேகமாக ஓட்டுபவர்கள், மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள், சீட் பெல்ட் அணியாதவர்கள், ஒருவழிப் பாதைகளில் வாகனங்களை ஓட்டுபவர்கள், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேராகப் பயணிப்பவர்கள் போன்ற பலரும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுகின்றனர். விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன், சில நேரங்களில் உரிமம் ரத்து செய்யவும் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.
அந்த வகையில் மும்பையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாலிபருக்கு போக்குவரத்து போலீஸ்காரர் அபராதம் விதித்தார். இதற்கு பதிலடியாக தெளிவில்லாத நம்பர் பிளேட்டுடன் ஸ்கூட்டரில் சென்ற அந்த போலீஸ்காரரை மடக்கி பிடித்து வாலிபர் அபராதம் கட்ட வைத்த சம்பவம் நடந்துள்ளது.
மும்பையை அடுத்த தானே நகரில் உள்ள வாக்ளே எஸ்டேட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாலிபரை 2 போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர்.
பின்னர் இரண்டு போலீசாரும் கிளம்ப அவர்களது ஸ்கூட்டரில் ஏறிய போது தான் அந்த வாலிபர் போலீஸ்காரர் ஓட்டிய ஸ்கூட்டரின் நம்பர் பிளேட் தெளிவில்லாமலும், எண்கள் அழிந்து இருந்ததையும் கவனித்தார்.
பொதுமக்களுக்கு ஒரு நீதி, அதிகாரத்தில் உள்ள போலீசாருக்கு ஒரு நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது தானே என்று பொங்கி எழுந்த அந்த வாலிபர் இதுகுறித்து போலீஸ்காரரிடம் தட்டிக்கேட்க, அதை பொருட்படுத்தாமல் அந்த இரண்டு போலீஸ்காரர்களும் ஸ்கூட்டரில் கிளம்பி சென்றார். இதனால் பொறுமையிழந்து ஸ்கூட்டரை துரத்தி சென்று அதை பின்னால் பிடித்து நிறுத்தினார் அந்த வாலிபர்.
உங்கள் சொந்த வாகனம் போக்குவரத்து சட்டங்களை பின்பற்றாதபோது, மற்றவர்களுக்கு எப்படி அபராதம் விதிக்க முடியும்? என்ற அந்த வாலிபர் விதிமுறையை மீறிய உங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போலீசாரை தன்னுடைய செல்போனில் வீடியோவும் எடுக்க தொடங்கினர். இவர்களுடன் நடக்கும் வாக்குவாதத்தை அங்கு சாலையில் நின்று வேடிக்கை பார்த்தவர்களும் வீடியோ எடுத்தனர்.
சில மணி நேரங்களுக்குள், இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலான நிலையில் விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர்.
இந்த விவகாரம் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்ற நிலையில், விதிமுறையை மீறியதற்காக சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹெல்மெட் விதிமீறல் மற்றும் பணியில் இருந்த அரசு ஊழியரை தடுத்ததற்காக பைக் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் பங்கஜ் ஷிர்சாத் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்று அதிகாரிகளை நிறுத்தவோ அல்லது சாலையில் இதுபோன்ற வீடியோக்களை எடுக்கவோ கூடாது என்று மக்களை எச்சரித்த அவர், இரு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மேல் விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை முடிந்ததும் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
போக்குவரத்து போலீசார் சாலைகளில் விதிமுறைகளுக்கு முன்மாதிரியாக நடந்து கொண்டால், மக்கள் இயல்பாகவே விதிகளை மதிக்கத் தொடங்குவார்கள். உண்மையான தாக்கம் சட்டத்தைக் கற்பிப்பதன் மூலம் அல்ல, அதைப் பின்பற்றுவதன் மூலம் வருகிறது.
இந்தச் சம்பவம் உண்மையில் ஒருவரை சிந்திக்க வைக்கிறது, சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சாதாரண மக்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டால், சட்டத்தை அமல்படுத்துபவர்கள் நேர்மையுடன் அதையே செய்ய வேண்டும்.
