இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மூடி உள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூடப்பட்ட நிலையில், ரசிகர்கள் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை டேக் செய்து வருகின்றனர்.
திடீரென விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூடப்பட்டிருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழும் விராட் கோலி, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை வெற்றிக்குப் பிறகு, டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்.
அதன்பிறகு கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் விராட் கோலி, வருகின்ற 2027 உலகக்கோப்பை உடன் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது ஒருநாள் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் விராட் கோலி அபார ஃபார்மில் இருக்கிறார். தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் 85 சதங்களை அடித்துள்ள விராட் கோலி, 100 சதங்களை எட்ட இன்னும் 15 சதங்களே தேவைப்படுகின்றன.
இருப்பினும் உலகக்கோப்பைக்குள் 30 முதல் 35 வரையிலான ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்தியா விளையாட இருப்பதால், இந்த சாதனையை நிகழ்த்துவது மிகவும் கடினம் என்றே விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திடீரென விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு எதிராக பிசிசிஐ செயல்படுவதாக ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென டி-ஆக்டிவேட் செய்யப்பட்டிருப்பது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்ஸ்டாகிராமில் விராட் கோலியின் பக்கத்தை எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லை என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவருடைய மனைவியான அனுஷ்கா சர்மாவை இன்ஸ்டாகிராமில் டேக் செய்து, விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் எதனால் மூடப்பட்டது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், தற்போதைய இந்திய டி20 அணி பற்றி பெருமிதமாக பேசியிருந்தார்.
குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 150 க்கும் மேற்பட்ட ரன்களை வெறும் பத்தே ஓவர்களில் இந்திய அணி துரத்தி வெற்றியைப் பெற்றது பாராட்டத்தக்க வகையில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் 2024 டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு சூரிய குமாரியாதவின் கேட்ச்சும், பும்ராவின் பந்துவீச்சும் தான் காரணம் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் இறுதிப்போட்டியில் விராட் கோலி அடித்த அரைசதம் பற்றி எதுவும் குறிப்பிடாத காரணத்தால், அஸ்வின் கோலியை மறைமுகமாக குற்றம் சாட்டுவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தனர்.
ரசிகர்களின் இந்த கருத்துக்கு ஸ்மார்ட் ஆக பதில் அளித்த அஸ்வின், சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்கள் நகைச்சுவையாக இருப்பதாக விராட் கோலியிடம் தான் பேசியதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடந்து அடுத்த இரு தினங்களில் 27.5 கோடி ஃபாலோவர்ஸ் கொண்ட கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மூடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.