
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்தியாவைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அதிகப் போட்டிகள் மற்றும் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தான் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
வருகின்ற 2027 உலகக்கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுப்பதே கோலியின் இலக்காக உள்ளது. இந்நிலையில் 7 மாத இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களம் கண்டார் கோலி. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் மற்றும் கோலி சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்கவே இந்திய அணி திணறியது.
இதற்கிடையில் மழை குறுக்கிடவே போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முடிவில் இந்தியா 136 ரன்களை மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.
சர்வதேச அளவில் அதிக போட்டிகளை விளையாடிய வீரராக முதல் இடத்தில் இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை சேர்த்து சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதற்கு அடுத்தபடியாக 652 போட்டிகளுடன் ஜெயவர்த்தனே 2வது இடத்திலும், 594 போட்டிகளுடன் சங்ககாரா 3வது இடத்திலும், 586 போட்டிகளுடன் ஜெயசூர்யா 4வது இடத்திலும், 560 போட்டிகளுடன் ரிக்கி பாண்டிங் 5வது இடத்திலும் மற்றும் 551 போட்டிகளுடன் விராட் கோலி 6வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் தற்போது விராட் கோலி மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுடன், ஐபிஎல் போட்டிகளையும் சேர்த்துக் கொண்டால் அநேகமாக அதிகபட்ச போட்டிகளை விளையாடியவர்கள் பட்டியலில் விராட் கோலி தான் முதலிடத்தில் இருப்பார். இந்தத் தகவலை நேற்றைய போட்டியின் போது விராட் கோலியே தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கோலி மேலும் கூறுகையில், “ என்னுடைய சிறுவயதில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை அதிகாலையில் எழுந்து தொலைக்காட்சியில் பார்ப்பேன். பௌலர்கள் வீசும் பந்துகள் அனைத்தும் பிட்ச்சாகி நேராக முகத்திற்கு வருவதை கண்டுள்ளேன். எதிர்காலத்தில் நாமும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக திறமையான பந்துவீச்சை எதிர் கொண்டு விளையாடினால், கிரிக்கெட் உலகில் வலிமையான வீரராக உருவெடுக்க முடியும் என்று நம்பினேன். இந்த நம்பிக்கை தான் என்னை இவ்வளவு தூரம் அழைத்துக் கொண்டு வந்தது.
கடந்த 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஓய்வே இல்லாமல் எண்ணற்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி விட்டேன். சொல்லப்போனால் சர்வதே கிரிக்கெட் போட்டிகளுடன், ஐபிஎல் போட்டிகளையும் சேர்த்துக் கொண்டால், அதிக போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் அநேகமாக நான் தான் முதலிடத்தில் இருப்பேன்.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் ஓய்வுக்குப் பிறகு எனக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க அதிக நாட்கள் கிடைத்தது. மனைவி மற்றும் மகளுடன் நேரத்தை செலவிட்டது, வாழ்வில் மகிழ்ச்சியான தருணமாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஒரு நாள் போட்டிக்குத் திரும்பி உள்ளேன். முன்பை விடவும் இப்போது நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் விளையாடுவது எப்போதும் எனக்கு உற்சாகமாகவே இருக்கும்” என விராட் கோலி தெரிவித்தார்.
சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளை சேர்த்துக் கொண்டால் விராட் கோலி இதுவரை 818 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதேசமயம் சச்சின் டெண்டுல்கர் 742 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.