
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரமாக வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தத் தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களிலும், குளிர் பிரதேசங்களிலும் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளுக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் மாதிரிகளை கண்டிப்பாக ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பரிசோதனைக்குப் பிறகு புதிய வைரஸ் ஏதும் கண்டறியப்பட்டால், மேலும் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மருத்துவர்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
அதேபோல் பொதுமக்களுக்குக் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருந்தகங்களில் இருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அல்லது பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது கை, கால்களை சுத்தமாக கழுவவேண்டும் என்றும், வீட்டில் இருக்கும் போதும் அடிக்கடி கைகளை கழுவவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலிக்கு கைவைத்தியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் உங்கள் வீட்டில் யாருக்காவது வைரஸ் பாதிப்பு இருந்தால் நோய் பாதிக்கப்பட்டவர் வீட்டில் இருக்கும் போதும் முகக்கவசம் அணி வேண்டும் என்றும் மற்றவர்கள் நோயாளியை விட்டு தள்ளி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நோய்க்கு உடனடியாக சிகிச்சை எடுத்தால், 4, 5 நாட்களில் குணமாகும் என்றும் நோயின் தீவிரத்தை பொருத்து அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவல் குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை அதிகம் தாக்குவதால் அவர்கள் அதிக பாதுகாப்புடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.