

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தனியார் நிறுவனங்களில் வேலையிழப்பு நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இதுதவிர ஏஐ தொழில்நுட்பத்தின் வரவுக்குப் பிறகு முன்னணி ஐடி நிறுவனங்களும் வேலையிழப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.
அவ்வகையில் கடந்த 2021-ம் ஆண்டில் ஜூம் (Zoom) மீட்டிங்கில் 900 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார் பெட்டர் ஹோம் & ஃபைனான்ஸ் (Better Home & Finance) நிறுவனத்தின் இந்திய வம்சாவளி தலைமைச் செயல் அதிகாரியான (CEO) விஷால் கார்க். 2020-ம் ஆண்டுக்குப் பிறகு வேலையிழப்பு நடவடிக்கைகள் சாதாரணமாகி விட்டாலும், ஜூம் மீட்டிங்கில நடந்த இந்த வேலையிழப்பு நடவடிக்கை மட்டும் உலகளவில் பேசுபொருளானது.
'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கார்க்கின் CEO பதவி பறிக்கப்பட்டுள்ளது. 900 பேரை நீக்கிய கார்க்கை, பெட்டர் ஹோம் & ஃபைனான்ஸ் நிறுவனம் நீக்கியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒருமனதாக வாக்களித்ததன் மூலம், கடந்த மாதத் தொடக்கத்தில் கார்க்கின் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் தன்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டி சட்ட ரீதியாக போராடி வருகிறார் கார்க்.
கார்க்கின் முடிவெடுக்கும் திறன் மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் நிறுவனத்தின் கணிசமான இழப்புகளே இந்த நீக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2022 முதல் இந்நிறுவனம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதோடு கார்க்கின் தலைமையில் இதன் பங்கு மதிப்பு 90%-கும் மேல் சரிந்தது.
ஜூம் (ZOOM) மீட்டிங்கில் என்ன நடந்தது?
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 3 நிமிட ஜூம் அழைப்பில் 900-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக கார்க் கூறினார். இதன்மூலம் உலகளாவிய பெருநிறுவன சர்ச்சையில் சிக்கினார் கார்க். இநதப் பணி நீக்க நடவடிக்கை பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பெட்டர் நிறுவனத்தின் பெயரையும் கெடுத்தது.
ஆனால் நிறுவனம் மெல்ல மெல்ல மீண்டு வரும் வேளையில் தன்னுடைய பணி நீக்கம் நடந்துள்ளதாக கார்க் வாதிடுகிறார்.
இடைக்கால CEO:
கார்க்கின் பணி நீக்கத்திற்கு பிறகு ஹெட்ஜ்-ஃபண்ட் மேலாளர் டேனியல் லூயிஸ், இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தான் இவர் பெட்டர் நிறுவனத்தின் வாரியக் குழுவில் இணைந்தார்.
வாரியத்தில் இணைவதற்கு முன்பாக, நிறுவனத்தின் யுக்தியைப் பாராட்டிய லூயிஸ், தன்னை அகற்றுவதற்கு உதவினார் என்று கார்க் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிகழ்வை துரோகம் என்றும், லூயிஸால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் கார்க் மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம்:
ஒரு காலத்தில் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இருந்த பெட்டர் நிறுவனம், தற்போது கிட்டத்தட்ட 300 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிந்துள்ளது. 2021-ல் 1.5 பில்லியன் டாலராக இருந்த ஆண்டு விற்பனை, 2023-ல் 70 மில்லியன் டாலராக சரிந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நிறுவனத்தின் கடன் அளவுகள் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பெட்டர் நிறுவனம் தற்போது லாபத்தை நெருங்கி வருவதாகவும் கார்க் கூறுகிறார்.
2026-ம் ஆண்டில் வருவாய் 200 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டக் கூடும் என்றும் அவர் நம்புகிறார்.
சட்ட நடவடிக்கை மற்றும் சம்பள சலுகை:
தனது CEO பதவியை மீட்டெடுக்க, பிரபல வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோவ் மூலம் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார் கார்க். பெட்டர் நிறுவனம் லாபத்தை ஈட்டும் வரை, ஆண்டுக்கு வெறும் 1 அமெரிக்க டாலர் சம்பளத்திற்குத் தான் மீண்டும் நிறுவனத்திற்குத் திரும்பத் தயார் என்றும் பெட்டர் நிறுவனத்திற்கு சலுகையை அறிவித்துள்ளார் கார்க். இருப்பினும் வாரியம் இந்தச் சலுகையை ஏற்குமா என்பது சந்தேகம் தான்.
நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குதாரர்களின் ஆதரவு, தனக்கு இருப்பதாக கூறி, தற்போதைய இயக்குநர்கள் குழுவையே மாற்றியமைக்க முயன்று வருகிறார் கார்க்.
விஷால் கார்க்கின் இந்த நடவடிக்கைகளை பெட்டர் ஹோம் வாரியம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. கார்க்கின் தவறான முடிவுகளின் விளைவால் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும், நிறுவனத்தின் சட்ட விதிகளை மீறி அவர் செயல்பட்டுள்ளதாகவும் வாரியம் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இருதரப்பு மோதல்:
வாரியம், இடைக்கால CEO டேனியல் லூயிஸ்-க்கு ஆதரவாக உள்ளது. இதனால் விஷால் கார்க்குக்கும், வாரியத்திற்கும் இடையே பெட்டர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் மோதல் போக்கு நீடிக்கிறது. இதனால் நிறுவனத்தின் பங்குதாரர்கள் இரு தரப்பில் யாராக்கு ஆதரவு அளிப்பது என்ற சந்தேகத்தில் உள்ளனர்.
மீண்டும் திரும்பிய கர்மா:
ஒரு காலத்தில் ஜூம் மீட்டிங்கில் 900 பேரை நீக்கியவர் தான், இன்று தனது வேலையைத் திரும்பப் பெற சட்டப் போராட்டத்தை கையில் எடுத்ததோடு, சம்பளத்தில் சலுகையையும் அறிவித்துள்ளார். அன்று பல பேரை வேலையில் இருந்து நீக்கியவரை, இன்று நிறுவனமே தூக்கி எறிந்துள்ளது. இதன் மூலம் கர்மா மீண்டும் திரும்பியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.