
சினிமா உலகில் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார். இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் காட்சிகள் தரமாகவும் இருந்தன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாகத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அவதார் படத்தின் முதல் பாகம் கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியாகி உலகம் முழுக்க அதிக வசூலை ஈட்டியது. திரைப்பட உலகில் மற்றுமொரு புதிய சகாப்தத்தையே உருவாக்கியது இப்படம். அன்றுமுதல் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர் ரசிகர்கள்.
13 வருடங்கள் கழித்து ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ இரண்டாம் பாகமாக வெளியாகி, மீண்டும் வசூலில் அசாத்திய சாதனையை நிகழ்த்தியது. உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திய இப்படம் கிட்டத்தட்ட ரூ.15,000 கோடியைக் கடந்தது. மேலும் திரைக்குப் பின் ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.
அவதார் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில், இதன் 3ஆம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். ரசிகர்களின் 3 வருட காத்திருப்புக்குப் பின் தற்போது அவதார் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
அவதார் திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் உலகளவில் புகழ்பெற்ற இயக்குநராக மாறி விட்டார். அவதார் திரைப்படத்தைப் பார்க்காத ரசிகர்கள் ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவிற்கு இப்படத்தின் வெற்றி எட்டுத்திக்கும் ஒலித்து விட்டது. இரண்டாம் பாகம் தண்ணீரை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. மூன்றாம் பாகம் நெருப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
‘அவதார் - ஃபயர் அன்ட் ஆஷ்’ என்ற 3ஆம் பாகத்தையும் ஜேம்ஸ் கேமரூன் தான் இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. அவதார் என்றாலே பிரம்மாணடமான காட்சிகள், அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் காண்போரை வேறு உலகத்திற்கே அழைத்துச் செல்லும்.
3ஆம் பாகத்தின் டிரெய்லரும் பிரம்மாண்டம் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் இப்போதே எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. அவதார் படத்தின் முதலிரண்டு பாகங்களும் டிசம்பர் மாதத்தில் தான் வெளியாகின. தற்போது மூன்றாவது பாகமும் டிசம்பர் மாதத்திலேயே வெளியாக உள்ளது.
1. அவதார் - டிசம்பர் 18 2009
2. அவதார்: தி வே ஆஃப் வாட்டர் - டிசம்பர் 16 2022
3. அவதார்: ஃபயர் அன்ட் ஆஷ் - டிசம்பர் 19 2025.