
ஐடிஐ முடித்த மாணவர்களுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் ஆண்டுதோறும் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி சிறப்பு முகாம் வைத்து தகுதியான மாணவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முகாமில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.14,000 உதவித்தொகையும் வழங்கப்படும். அவ்வகையில் தற்போது 2025-26 ஆம் ஆண்டுக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்கான ஆட்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில் பழகுநர் சட்டம் 1961-இன் படி, தொழிற்சாலை நிறுவனங்களில் ‘தொழில் பழகுநர் பயிற்சி திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.
தமிழக மாணவர்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் ஐடிஐ முடித்த மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, ஆண்டுதோறும் தொழில் பழகுநர் பயிற்சியை வழங்கி வருகிறது. ஒரு வருட காலத்திற்கு அளிக்கப்படும் பயிற்சிக்கு ஐடிஐ பிரிவில் மெக்கானிக்கல் மோட்டார் வெகிகிள், எலக்ட்ரீஷியன், டர்னர், டீசல் மெக்கானிக், ஃபிட்டர் மற்றும் வெல்டிங் துறைகளை முதன்மைப் பாடமாக படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நடப்பாண்டுக்கான பயிற்சியில் சேர மாணவர்களுக்கு சிறப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தொழில் பழகுநர் பயிற்சி குறித்து மேலாண் இயக்குநர் கூறுகையில், “குரோம்பேட்டையில் இருக்கும் மாநகர் போக்குவரத்துக் கழகத் தொழிற்பயிற்சி பள்ளியில் ஐடிஐ மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பயிற்சியுடன் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.14,000 வழங்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஐடிஐ மாணவர்கள் அனைவரும் தொழில் திறனை மேம்படுத்திக் கொண்டு, போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பினைப் பெற சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொழில் பழகுநர் நேரடி பயிற்சியின் போது பேருந்து பராமரிப்பு, போக்குவரத்து வாகனங்களைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முடியும். பயிற்சியின் முடிவில் NCVT/SCVT அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
பயிற்சி காலம் முடிந்த பிறகு சென்னைப் போக்குவரத்துக் கழகம், தனியார் பேருந்து மற்றும் தொழிற்சாலைகளில் ஐடிஐ மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.