உச்சக்கட்டத்தில் போர்… ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியை கொன்ற இஸ்ரேல்!
தற்போது இஸ்ரேல் லெபனானை குறிவைத்து கொடூரமாகத் தாக்கி வருகிறது. அந்தவகையில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியை இஸ்ரேல் கொன்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை முதல் ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனானை தாக்கி வருகிறது இஸ்ரேல். இதில் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 1000 கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது அமெரிக்கா உட்பட சில உலகநாடுகள் போரை கைவிடும்படி இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியது.
ஆனால் இஸ்ரேல் அதனை நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களின் இராணுவம் ஹிஸ்புல்லாவை முழு பலத்துடன் தாக்கும் என உறுதியாக தெரிவித்தார். தங்களின் அனைத்து இலக்குகளையும் அடையும் வரை நிறுத்த மாட்டோம் என்றும் முதலில் வடக்கில் வசிப்பவர்களை பாதுகாப்பாக அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம் என்றும் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். ஹிஸ்புல்லா ராணுவ தளபதிகளையும் கமாண்டர்களையும் குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேலில் சைரன் சத்தம் ஒலித்தப்படியே உள்ளது.
லெபனானில் மக்கள் எங்கையும் தங்க பாதுகப்பான சூழல் இல்லை என்பதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே இன்று இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியான முகமது ஹுசைன் ஸ்ரவுர் (Muhammad Hussein Srour) உயிரிழந்துள்ளார். இந்த ட்ரோன் வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு படை பகிர்ந்துள்ளது. இந்தத் தாக்குதல் முகமது ஹுசைன் ஸ்ரவுருக்காகவே நடத்தப்பட்டது என்று தெரிகிறது.
1996ம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பில் சேர்ந்த ஒரு சாதாரண உறுப்பினராக மட்டுமே இருந்த இவர், பின்னர் பல்வேறு பதவிகளை பெற்று ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தும் போர்களில் முக்கிய பங்கு ஆற்றி வந்துள்ளார்.
இவர் ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் மற்றும் வெடி மருந்து தாக்குதல்களில் சிறப்பாக செயலாற்றியிருக்கிறார். மேலும் இந்த அமைப்பின் விமானப்படையின் வளர்ச்சிக்கு பின்னால் இவர் தான் இருந்திருக்கிறார். இப்போது இவரின் இறப்பு ஹிஸ்புல்லா அமைப்பின் தரப்புக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது.