சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றானது செம்பரம்பாக்கம் ஏரி ஆகும். இது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர் மட்ட உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்..
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 20.32 அடிக்கு தண்ணீர் உள்ளது; வினாடிக்கு 1,100 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் முதல்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 21.20 அடியாக இருந்தது. ஏரிக்கு இன்று காலையில் வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது.அதன்பிறகு பெய்த கனமழையின் காரணமாக இப்போது ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக தண்ணீரை திறந்து விட காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 21.10.2024 அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 14.14 அடியாகவும் கொள்ளளவு 1378 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் விரைவாக நிரம்பி வருகின்றன. நீர் பிடிப்பு பகுதிகளில் பருவ மழைக் காரணமாக மேலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக அதிக வெள்ள நீர் (Flash flood) இந்த ஏரி பெறவும் வாய்ப்புகள் உள்ளன.
ஏரியின் நீர்தேக்க மட்டத்தினை 21 அடியாக தொடர்ந்து பராமரிப்பது மிகவும் கடினம்.மேலும், ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது அதிக மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக வரும். இதனால் ஏரியில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் உயிர்ச்சேதம்,பொருட் சேதம் போன்றவற்றை தவிர்க்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது வினாடிக்கு 100 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.மேலும் ஏரியை நீர்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கிறது.எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனுர், குன்றத்துர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை, அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொதும்க்கள் அரசின் இந்த அறிவிப்பினை முறையாக பின்பற்றி பெருவெள்ளத்தால் ஏற்படும் சேதங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.