

சமூக வலைதள நிறுவனமான மெட்டா ஆதரவுடன் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ள ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகள்(Ray-Ban Meta smart glasses) அதிகம் விற்பனையாகி வருகிறது. இதன் இரண்டாம் தலைமுறை மாடல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், 2025-ம் ஆண்டில் மட்டும் 7 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளதாக மெட்டா கூறுகிறது.
இந்த கண்ணாடிகளில் உள்ளமைக்கப்பட்ட குரல் மூலம் இயங்கும் மெட்டா ஏ.ஐ அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் தொலைபேசியைத் தொடாமலேயே புகைப்படங்கள் எடுப்பது (அ) நேரலை ஒளிபரப்பு செய்வது போன்ற பல்வேறு வசதிகளைப் பெற முடியும்.
தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் புதுமையான கேட்ஜெட்களை விரும்புவோர் மத்தியில் இந்த புதிய ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகள், SMS அனுப்புவது, அழைப்புகள் மேற்கொள்வது முதல் புகைப்படங்கள் எடுப்பது வரை பல்வேறு செயல்பாடுகளைக் கைகளை பயன்படுத்தாமல் மேற்கொள்ள பயனர்களுக்கு உதவுகின்றன.
மெட்டா ஏஐ செயலியின் அமைப்புகளை நிர்வகிப்பதன் மூலம், கண்ணாடிகள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக தொலைபேசியில் சேமிக்க முடியும் என்று மெட்டா தெரிவித்துள்ளது. பயனர்கள் கண்ணாடிகள் மூலமாக நேரடியாக நேரலை ஒளிபரப்பு சேவையையும் பயன்படுத்த முடியும். கண்ணாடியை அணிந்திருக்கும்போது, பயனர்கள் தாங்கள் பார்க்கும் ஒன்றைப் பற்றி நிகழ்நேரத்தில் மொழிபெயர்ப்பு அல்லது தகவல்களைக் கேட்க முடியும்.
இந்த கண்ணாடிகள், பாரீஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு லென்ஸ் உற்பத்தியாளரான எசிலார் லுக்சோட்டிகாவுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்களைக் கவரமெட்டா நிறுவனம் இந்த செயற்கை நுண்ணறிவு கண்ணாடிகள் மூலம் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் தொழில்நுட்ப புரட்சியின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகின்றன.
இருப்பினும், சமீபத்திய புலனாய்வு ஒன்று இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மையைத் வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, இந்த ஸ்மார்ட் கிளாஸ், பயனர்களின் அந்தரங்க காட்சிகளை கண்காணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கண்ணாடி அணிந்து நாம் ஈடுபடும் செயல்கள், படுக்கை அறை காணொளிகளின் பதிவுகளை கென்யாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் திருடுவதாக கூறப்படுகிறது.
அதாவது, ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள், கென்யாவில் உள்ள ஒப்பந்த ஊழியர்களால் ஆய்வு செய்யப்படுவதால், பயனர் தனியுரிமைக்கு (Privacy) பெரிய ஆபத்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிப்பதற்காக (AI Training), வெளிநாட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பயனர்களின் மிகவும் அந்தரங்கமான வீடியோக்களை ஆய்வு செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஊழியர்கள் கிளிப்களைப் பார்ப்பதற்கும், லேபிளிடுவதற்கும், வகைப்படுத்துவதற்கும் ஊதியம் பெறுகிறார்கள்.
கென்யாவைச் சேர்ந்த சாமா(Sama) என்ற தரவு லேபிளிங் நிறுவனம், பயனர்களின் அந்தரங்கமான வீடியோக்களை AI பயிற்சிக்காகப் பார்க்கிறது, இது கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மெட்டா நிறுவனம், சமூக ஊடக உள்ளடக்கத்தை நிர்வகிப்பதற்கும் (Content moderation) AI பயிற்சிக்காக, கென்யாவைச் சேர்ந்த சாமா போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்துகிறது.
குளியலறை, படுக்கையறை மற்றும் அந்தரங்க காட்சிகள், வங்கித் தகவல்கள் போன்றவற்றை இந்த ஸ்மார்ட் கிளாஸ் பதிவு செய்து, ஆப்பிரிக்காவில் உள்ள ஊழியர்களுக்கு அனுப்புகிறது. ஸ்மார்ட் கிளாஸில் உள்ள கேமரா மூலம் மற்றவர்களை அனுமதியின்றி பதிவு செய்ய முடியும், இது தனியுரிமையை மீறுவதாகும்.
சுவீடன் நாட்டின் Svenska Dagbladet மற்றும் Göteborgs-Posten ஆகிய ஊடகங்களின் அறிக்கையின்படி, கென்யாவின் நைரோபியில் உள்ள 'சாமா' (Sama) என்ற மெட்டாவின் கூட்டாளர் நிறுவனத்தில் பணிபுரியும் தரவு லேபிளர்கள் (Data labelers), தாங்கள் கண்ட காட்சிகளை விவரித்துள்ளனர்.
பயனர்கள் கழிப்பறையில் இருப்பது, ஆடை மாற்றுவது, உடலுறவில் ஈடுபடுவது, வங்கி அட்டைகளின் விவரங்களைப் பதிவு செய்வது மற்றும் ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பது போன்ற வீடியோக்களைத் தாங்கள் ஆய்வு செய்ய வேண்டியிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு ஒப்பந்த ஊழியர் கூறுகையில், ‘ஒரு நபர் தனது கண்ணாடியைப் படுக்கையறை மேஜையில் வைத்துவிட்டுச் சென்றார். அதன் பிறகு அவர் மனைவி அறைக்குள் வந்து ஆடை மாற்றிய காட்சிகள் பதிவாகியிருந்தன. தாங்கள் பதிவு செய்யப்படுகிறோம் என்பதே தெரியாமல் அந்தத் தம்பதியினர் இருந்தனர்’ என்று ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
‘தரவு சேகரிப்பு இவ்வளவு தூரம் நடக்கிறது என்று தெரிந்தால், யாரும் இந்தக் கண்ணாடியைப் பயன்படுத்தத் துணிய மாட்டார்கள்’ என்று மற்றொரு ஊழியர் கூறியுள்ளார்.
இந்த வகையான காட்சிகளை ஆய்வு செய்வது தங்களுக்கு மிகுந்த சங்கடத்தை அளிப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வேலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தகைய காட்சிகளை வகைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கணினி மூலம் தானாகவே முகங்களை மறைக்கும் (Auto-blur) தொழில்நுட்பம் சரியாக செயல்படாதபோது, ஊழியர்கள் தனிநபர்களின் முகங்களையும், அந்தரங்க காட்சிகளையும் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த ஸ்மார்ட் கிளாஸ்களைப் பயன்படுத்தும்போது அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம், குறிப்பாக தனிப்பட்ட இடங்களில்.