‘டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் நாங்கள் மூடுவோம்’ கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

‘டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் நாங்கள் மூடுவோம்’ கிருஷ்ணசாமி எச்சரிக்கை!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் நாங்களே அந்தக் கடைகளை மூடுவோம். அதேபோல், தமிழகத்தில் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை அரசு தடுக்காவிட்டால் அதையும் நாங்கள் செய்து காட்டுவோம்” என்று அவர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து, கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக அரசு மீது கடுமையாகக் குற்றஞ்சாட்டிய கிருஷ்ணசாமி, ‘ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள மது உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும்’ எனவும் கூறி இருக்கிறார்.

முன்னதாக, ‘மதுவால் கிடைக்கும் வருமானம் தமிழ்நாட்டுக்கு அவமானம்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில்தான் அமைச்சர் செந்தில்பாலாஜியை மிக கடுமையாக விமர்சித்து இருந்தார். அதேபோல், ‘மதுவில்லா தமிழகம் என்ற குறிக்கோளுக்காக பாமக, அதிமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியுடனும் கை கோர்க்கத் தயார்’ என வேல்முருகன் அறிவித்து உள்ளார்.

இதுபோன்று தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் பல்வேறு கோரிக்கைகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது கிருஷ்ணசாமியும் மதுவிலக்கை வலியுறுத்தும் விதமாகப் பேசி இருக்கிறார். மொத்தத்தில் மதுவிலக்கை மையப்படுத்தி திமுக அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரளும் சூழல் உருவாகி இருப்பது மிகுந்த முக்கியத்துவம் மிக்கதாகப் பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com