கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில், 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான விசாரணை நடந்து வரும் நிலையில், விபத்துக்கு முன் பைலட்களின் செயல்பாடுகள் குறித்தான செய்திகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த மாதம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளான நிலையில், விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்.
இந்திய விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) கடந்த சனிக்கிழமை வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் டேக் ஆஃப் ஆன சில வினாடிகளில் இரு இன்ஜின்களின் எரிபொருள் சுவிட்சுகள் "ரன்" நிலையில் இருந்து "கட்ஆஃப்" நிலைக்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாகதான், இன்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்று, விமானம் உந்துசக்தியை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டுள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் காக்பிட் குரல் பதிவில், விமானம் டேக் ஆஃப் ஆன சில வினாடிகளுக்குப் பிறகு, முதல் அதிகாரி (First Officer) அனுபவம் வாய்ந்த கேப்டனிடம், ஏன் எரிபொருள் சுவிட்சுகளை "கட்ஆஃப்" நிலைக்கு மாற்றினார் என்று கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கேப்டன், “தான் அவ்வாறு செய்யவில்லை” என்று பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல், விபத்துக்கான முக்கிய காரணமாக மனிதத் தவறே இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இருப்பினும் எப்படி கட் ஆஃப் ஆனது என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை.
விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் சுமீத் சபர்வால் (56) மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் (32) ஆகியோர் ஆவர். கேப்டன் சபர்வால் 15,638 மணிநேர அனுபவமும், முதல் அதிகாரி குந்தர் 3,403 மணிநேர அனுபவமும் கொண்டவர்கள்.
ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் இயந்திர அல்லது பராமரிப்பு குறைபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், அனைத்து தேவையான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்தவுடன், விமானத்தின் துணை ஆற்றல் ஆதாரமான ராம் ஏர் டர்பைன் (RAM air turbine) இயக்கப்பட்டதாக சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. இது இன்ஜின்களில் சக்தி இழப்பு ஏற்பட்டதைக் குறிக்கிறது. இதனால் விமானம் உந்துசக்தியை இழக்கத் தொடங்கியது. மேலும் 650 அடி உயரத்தை அடைந்த பிறகு, ஜெட் விமானம் கீழே விழத் தொடங்கியது.
விபத்து நடந்த இடத்தில், எரிபொருள் சுவிட்சுகள் இரண்டும் "ரன்" நிலையிலேயே இருந்தன. ஆனால், இடையில் கட் ஆஃப் நிலைக்கு மாறியிருக்கிறது. விபத்துக்கு முன் இரு இன்ஜின்களும் மீண்டும் இயங்க முயற்சித்ததற்கான அறிகுறிகளும் இருந்ததாக முதற்கட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் விமானம் மிகவும் தாழ்வாகவும், மெதுவாகவும் இருந்ததால் மீள முடியவில்லை என்று விமானப் பாதுகாப்பு நிபுணர் ஜான் நான்ஸ் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
ஆகையால், இது ஒரு தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட விபத்து அல்ல என்றும், மனித தவறால் ஏற்பட்ட விபத்தே என்று இந்த விசாரணையின் மூலம் கணிக்கப்படுகிறது. இருப்பினும் எரிபொருள் சுவிட்சுகள் எப்படி கட் ஆஃப் ஆனது என்பதை கண்டறிந்தால் மட்டுமே உறுதியான விளக்கத்தை அளிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.